“தமிழ் மொழி வளரும் இக்காலத்து முன்னூல்களை ஒதுக்கிப் படிக்கும் வழக்கம் வளரக்கூடாது. எல்லாரும் எல்லா நூல்களையும் படிப்பது என்பது முடியாது. எனினும், சிலர் சில துறை நூல்களைக் கற்கலாம்; வேறு சிலர் வேறு சில துறை நூல்களைக் கற்கலாம். ஆகக்கூடி எல்லா நூல்களும் நாட்டில் கற்கப்பட வேண்டும். அப்போதுதான் குறைவற்ற வளர்ச்சி தமிழுக்கு உண்டாகும். கற்கும் முயற்சியும் அன்பும் ஆர்வமும் பெருகினாற்றான் நூல்கள் வாழும். தமிழர் வாழ்வும் உயர்வும் நிலையும் எல்லாம் தமிழின் வாழ்வையும் உயர்வையும் நிலையையும் பொறுத்தன என்பது கண்கூடு. மொழிக் காப்பு என்பது அம்மொழியில் தோன்றிய நூற் காப்பாகும்.”1 திறனாய்வாளர் பணி கடந்த காலம் உருவாக்கித் தந்த விழுமிய இலக்கியச் செல்வம் நமக்கு முன்னே குவிந்து கிடக்கின்றது. நிகழ்காலத்தில் நாள் தோறும் புத்தம் புதிய இலக்கியச் சிந்தனைகள் தோன்றி, தொடுவானத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றன. இறந்த காலமும் நிகழ் காலமும் இணைந்து எதிர்காலத்தைப் படைக்க வேண்டும். ஆதலின், இரண்டையும் இணைக்கிற திறனாய்வாளர் பலர் வேண்டும். முழு நோக்கும் சிந்தனைத் திறனும் ஒருங்கு வாய்க்கப் பெற்ற திறனாய்வாளர்கள் தம் பேராற்றலால், மிகத் தொலைவில் உள்ள கடந்த காலத்துக் கருத்துக்களை, நிகழ்காலத்திற்குள்-அண்மைக் காட்சியின் எல்லைக்குள், கொண்டு வருகின்றனர். கொண்டு வந்து அவற்றின் முன் தாம் நின்று அவற்றை நமக்கு விளக்கிக் காட்டுகின்றனர்; கடல் போல் விரிந்து கிடக்கும் கருத்துலகிற்கு நம்மை அழைத்துச் சென்று வியப்பூட்டும் கலைச் செல்வங்களை அறிமுகப்படுத்தி நம்மைக் களிப்பில் ஆழ்த்துகின்றனர். இவற்றின் விளைவாய், புதிய உலகம் உருவாகி, அங்கே ஒழுங்கு முறை, செங்கோல் செலுத்துகின்றது. பழமை, புதுமைக் கோலம் புனைகின்றது. இவ்வாறு கருத்துலகம் இயங்கி வருவதால், காலந்தோறும் முன்னும் பின்னும் நோக்கிப் புத்தம் புதிய கலைகளை உருவாக்குவது படைப்பாளர்களின் முதன்மையான பணியாகின்றது. ஏனெனில், வாழும் தலைமுறை, முன் வாழ்ந்த தலைமுறை நுகர்ந்த கலைச்சுவையை விட, தான் புதிதாகப் படைக்கின்ற கலைதரும் சுவையையே பெரிதும் விரும்புகின்றது; 1. எந்தச் சிலம்பு (1964) பக்கம் 97. |