பக்கம் எண் :

147அறிமுகம்

இறந்த காலத்தை நினைக்கவும், எதிர் காலத்தை எண்ணவும் மறுக்கின்றது.
இந்த நிலையை மாற்றி இரண்டு காலங்களையும் நிகழ்காலத்துடன்
இணைக்கின்றவர் வேண்டும்.

     பொதுமக்கள் வாழ்வில் காலமும் இடமும் முதன்மை பெறுவதால்
அவற்றை அவர்கள் புறக்கணித்து வாழ முடியாது. அவர்கள் எல்லாமாகி
எங்கும் நிறைந்திருப்பவர் அல்லர். அவர்கள் ஓர் எல்லைக்கு
உட்பட்டவர்களே. எதிர்காலத்தை உருவாக்குகின்ற நெடுநோக்கும் (தீர்க்க
தரிசனமும்), வாழும் இடத்தின் சூழலை வென்று செயலாற்றும் திறனும்
உடைய திறனாய்வாளர்கள் பொது மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்; இருண்ட
பாதையிலும் ஒளி விளக்கைக் கையில் ஏந்திக்கொண்டு எதிர் காலத்தை
நோக்கிச் செல்கின்றனர்; கடந்த காலத்தின் தீமைகளை அகற்றி, நிகழ்
காலத்தின் குறைகளைக் களைந்து எதிர் காலத்தை உருவாக்கும் பணியை
ஆற்றுகின்றனர்.

புது உலகம் படைப்போம்

    நம்முடைய பழம்பெரும் இலக்கியச் செல்வங்கள் ஆழ்ந்தகன்ற
நுட்பமான கருத்துக்களைக் கொண்டவை; என்றென்றும் நிலைபெற்று
வாழக்கூடிய பேருண்மைகளை உரைப்பவை; முறையான இலக்கண
வரம்புகளை ஏற்படுத்திக் கொண்டு காலந்தோறும் வளர்ந்து வந்தவை.
இத்தகைய அழியாச் செல்வங்களை நமக்கு அளித்த முன்னோர்களை நாம்
நன்றியுடன் போற்றிப் பெருமைப்பட வேண்டும்.

     நூலாசிரியர்களை மதித்துப் போற்றுவதைப் போலவே அந்நூல்களின்
கருத்துவளம், செப்பம், சுவை ஆகியவற்றை எடுத்து விளக்கும்
திறனாய்வாளர்களாகிய உரையாசிரியர்களைப் போற்றி மதிக்க வேண்டும்.
அவர்கள் நம் இலக்கியச் செல்வங்களைப் பேணிக் காத்தவர்கள். இன்றும்
காத்துவருபவர்கள். அவற்றின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும்
திறன்படைத்தவர்கள். முறையாகத் தமிழ் பயின்று புலமை எய்தி,
உரைஎழுதும் பணியை மக்கட் பணியாகக் கருதித் தொண்டாற்றிய
உரையாசிரியர்களே, இன்று இந்த அளவிற்குப் பழம் பெருமைகளை நமக்கு
உணர்த்தியவர்கள். அவர்கள் தரும் ஒளியிலேயே நாம் கலைக்
கருவூலங்களைக் கண்டு திளைக்கின்றோம்.

     புலமைத் துறையில் எதனைக் கற்கிறோம் என்ற தெளிவும், கற்றபின்
இதனைக் கற்றோம் என்று அறுதியிட்டு உரைக்கும் திறனும் பெறுதல்
வேண்டும். ஆதலின் பழைய உரைகளை ஆழ்ந்து கற்போம்; கற்று
அவற்றிலிருந்து எதிர் கால வாழ்வுக்குத் தேவையான நற்கருத்துக்களைப்
பெறுவோம்; இறந்த