அறிமுகம் வித்துவான். செ. வேங்கடராமச் செட்டியார் அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் சாத்திர நூல்களும் தோத்திர நூல்களும் நிரம்பியிருத்தல் போலவே அவற்றை விளக்கம் செய்யும் உரை நூல்களும் நிரம்பியுள்ளன. மூல நூல்களுக்கு உள்ள பெருமை உரை நூல்களுக்கும் உண்டு. சில மூலநூல்கள் உரை நூல்களாலேயே பெருமை அடைந்துள்ளன என்னலாம். உரை நூல்கள் இல்லையேல் சில மூலநூல்கள் விளக்கம் பெறாமல் மறைந்து போயிருத்தலும் கூடும். இதை உளங்கொண்டு நோக்கினால், மூல நூல்களை மக்களிடையே மதிப்புடன் வாழச் செய்யும் பெருமை உரைநூல்களுக்கே உண்டு என்பது புலனாம். இப்பெருமை உரைநூல்களுக்கு இருத்தலால், மூல நூலின் பெயரை விடுத்து இளம்பூரணம், சேனாவரையம், பேராசிரியம், நச்சினார்க்கினியம் என உரையாசிரியரின் பெயரால் தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களை மக்கள் வழங்கலாயினர். தமிழ் மொழியில் பெருகக் காணப்படும் இலக்கியம், இலக்கணம் என்ற இருவகை நூல்களில் முதலில் இலக்கண நூல்களுக்கே உரை எழுதும் வழக்கம் உண்டாயிற்று. மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலேயே இலக்கண நூலுக்கு உரை வகுக்கும் முறையும் கூறப்பட்டிருத்தல் காணலாம். பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும் (மரபியல்-103) எனவும், சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற வின்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே (மரபியல்-105) |