பக்கம் எண் :

உரையாசிரியர்கள்170

தொகுக்கப் பெற்று, ‘பத்துப்பாட்டு’ என்று பெயர் இடப்பட்டிருக்க வேண்டும்.

     களவியலுரை காலத்தில் ‘யாப்பிலக்கணம்’ பொருள் இலக்கணத்திலிருந்து
பிரிந்து, தனி இலக்கணம் ஆயிற்று. தொல்காப்பியர் காலத்தில் மூன்று
பகுதியாக இருந்த இலக்கணம், எழுத்து சொல் பொருள் யாப்பு என
நான்காயிற்று. இதனை,

     எழுத்ததி காரமும் சொல்லதி காரமும்
     யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து
    ‘பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்!’
     என்று வந்தார்.

என்ற பகுதியால் உணரலாம்.

     தோன்றிப் பூவை (மருதோன்றி-மருதாணி). பிற்காலத்து
உரையாசிரியர்கள் ‘காந்தள் மலர்’ என்று தவறாகக் கருதிப் பொருள் எழுதி
விட்டனர். ஆனால் களவியலுரை, காந்தளைக் குறிஞ்சி நிலத்துக்குரிய
பூவாகவும், தோன்றியை முல்லை நிலத்துக்குரிய பூவாகவும் (கருப்
பொருள்களை விளக்கும் இடத்தில்) குறிப்பிடுகின்றது.

     இத்தகைய இடங்கள் ஆராய்ச்சியாளர் சிந்தனையைத் தூண்டுகின்றன.

புகழ்பூத்த புலமை

    இறையனார் அகப் பொருளுரையை வழங்கிய உரையாசிரியரை
மறைமலையடிகள் பின்வருமாறு புகழ்கின்றார்:

    இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து
    சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும்
    அளவையின் விளையும் தெளிவுற விரித்து
    சுவைபெற உரைத்த நவையில் புலமையும்;
    மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து,
    சிவனையே முதல்எனச் சிவணிய காட்சியும்
    சீரிதின் இயைந்த கீரன்*

    இத்தகைய புகழ்மொழி பல கூறிப் புலவர் உலகம் காலந்தோறும்
இவரைப் போற்றும்; புகழ் பூத்த புலமையாளராய்-உரையாசிரியர்களுக்குத்
தலைவராய் இவர் விளங்குவார்.


 

* திருவொற்றியூர் மும்மணிக்கோவை - 19 (55-61)