பக்கம் எண் :

171ஆய்வு

2. தொல்காப்பிய உரையாசிரியர்கள்

     தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கண நூல் தமிழ் மொழியின்
தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த
தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு
உணர்த்தும் விழுமிய நூலாய் இது ஒளிர்கின்றது. இதனை இயற்றிய
தொல்காப்பியரின் குரல், காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து தெளிவாக
ஒலிக்கின்றது. தொல்காப்பியம் தனக்குப் பின் தோன்றிய பல இலக்கண
இலக்கியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழி காட்டி நடத்திச்
செல்லுகின்றது.

     தொல்காப்பியத்தின் கருத்தை உணரவும் உணர்த்தவும் புலவர்
பெருமக்கள் காலந்தோறும் முயன்று வந்தனர். அம் முயற்சியின் விளைவாய்
உரைகள் பல பெருகின. உரைவளம் கொண்ட பெருநூலாய்த் தொல்காப்பியம்
திகழ்கின்றது.

     தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப்பற்றி அறிஞர்
பெருமக்களிடையே கருத்து வேறுபாடு மிகுதியாக உண்டு. இந்நூல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது பெரும்பான்மையோர்
ஒப்புக்கொண்ட முடிவாகும். தொல்காப்பியர் பொருளதிகாரத்தில், தமிழகத்தை
ஆண்ட மூவேந்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். கி.பி. 250-க்குப் பிறகு
மூவேந்தர்கள் ஆட்சி மறைந்துவிட்டதை வரலாறு கூறுகின்றது. எனவே,
தொல்காப்பியர் மூவேந்தரும் செங்கோலாச்சிய காலத்தில் தொல்காப்பியத்தை
இயற்றினார் என்னலாம்.

     தொல்காப்பியத்திற்கு இளம்பூரணரே முதன்முதலில் உரைகண்டார்.
இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு என்பர். இளம்பூரணர் காலம்
வரை - தொல்காப்பியம் தோன்றியப் பல நூறு ஆண்டுகள் வரை, உரை
இல்லாமலே கற்கப்பட்டு வந்ததா என்ற வினா எழக்கூடியதே. ஆனால்
இந்நாள் வரை, இளம்பூரணரே தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர்
என்ற கருந்து நிலவி வருகின்றது. இளம்பூரணர் தம் உரைகளில் பிற
உரைகளாகச் சில கருத்துகளைத் தெரிவிக்கின்றார். உரை இயற்றிவர்
பெயரைக் குறிப்பிடவில்லை.

     இளம்பூரணர் தொடங்கி வைத்த உரைப்பணி, பல வகையாக வளர்ச்சி
பெற்றது. இவரது கருத்துகளை ஏற்று, புதிய இலக்கண நூல்களைச் சிலர்
செய்தனர். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டிலும் இவர் கூறிய
கருத்துகளைக் கொண்டு, நேமிநாதமும் நன்னூலும் தோன்றியன. பின்னால்