அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து, தமிழ்த்தொண்டு ஆற்றிய டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்றிற்கும் ஆராய்ச்சி உரை இயற்றியுள்ளார். பின்னங்குடி ச. சுப்பிரமணிய சாஸ்திரியார் சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியுள்ளார். இவ்வுரையில் வடமொழி இலக்கணக் கொள்கையை வலிந்து புகுத்திய இடங்களும், தமிழ் மொழி மரபுடன் பொருந்தாத முடிபுகளும் உள்ளன. தொல்காப்பியத்தையும், உரைகளையும் பதிப்பித்த போது அடிக் குறிப்பாகப் பல அரிய ஆராய்ச்சிக் குறிப்புரைகளைப் பலர் எழுதியுள்ளனர். இளவழகனார், சி. கணேசையர் இருவரும் தொல்காப்பியம் முழுமைக்கும் குறிப்புரை எழுதியுள்ளனர். எழுத்ததிகாரத்திற்கு ஞா. தேவநேயப் பாவாணரும், சொல்லதிகாரத்திற்கு ஆ பூவராகம் பிள்ளையும், கு. சுந்தரமூர்த்தியும் குறிப்புரையும் விளக்கமும் எழுதியுள்ளனர். இக்காலத்தில் தொல்காப்பிய ஆராய்ச்சி நூல்களிலும் பல உரைவிளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மு. இராகவ ஐயங்கார் இயற்றிய பொருளதிகார ஆராய்ச்சி, கா. சுப்பிரமணிய பிள்ளை இயற்றிய பழந்தமிழர் நாகரிகம் (பொருளதிகார ஆராய்ச்சி), கி. வா. ஜகந்நாதன் எழுதிய பயப்படாதீர்கள் (எழுத்ததிகார விளக்கம்), வாழும் தமிழ் (சொல்லதிகார ஆராய்ச்சி), வெங்கடராஜீலு ரெட்டியார் எழுதிய எழுத்திகார ஆராய்ச்சி, க. வெள்ளைவாரணனார் எழுதிய தொல்காப்பியம், லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் இயற்றிய தொல்காப்பியச் செல்வம், சி. இலக்குவனார் இயற்றிய தொல்காப்பிய ஆராய்ச்சி ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. தமிழறிஞர் சுப்பு ரெட்டியாரும் புலவர் குழந்தையும் பொருளதிகாரத்திற்குச் சிறந்த முறையில் ஆய்வுரை எழுதியுள்ளனர். 3. இளம்பூரணர் பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முழுமைக்கும் முதன்முதலில் உரைகண்டு அதனைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்கு அறிமுகப்படுத்திய பெருமை இளம்பூரணரையே சாரும். “பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கறையுள், தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே |