குவிந்துகிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கடலைத் தம் மதிவலி கொண்டு கடைந்து, முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார்” என்று புலவர் போற்றும் புகழுக்கு உரிய சான்றோர் இவர்.* இவருடைய உரை, சேனாவரையரும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் மிக நயமாகத் தொல்காப்பியத்திற்கு உரை எழுத உறுதுணையாய் அமைந்தது. தொல்காப்பியம் போன்ற பழம்பெரும் இலக்கண நூல்களுக்கு, அவை தோன்றிப் பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்னர் முதன் முதலில் உரை காண்பது எளிய செயல் அன்று. தகுதி வாய்ந்த ஒருவர் உரை கண்டபின், அவரைப் பின்பற்றி வேறு உரை கண்டு விளக்கம் எழுதுதல் அரிய செயல் அன்று. இளம்பூரணர்க்குப் பின் தொல்காப்பியத்திற்கு உரை கண்ட சேனாவரையர் நச்சினார்க்கினியர் முதலியோர் இவர் உரையினைப் போற்றி, பல முறை பயின்று தெளிவு பெற்று, இவருடைய புலமைச் சிறப்பை நன்கு உணர்ந்துள்ளனர்; இவரிடம் பெருமதிப்புக் கொண்டவராய் இருக்கின்றனர். தொல்காப்பியம், மாபெரும் நூலாக இன்று இத்துணைச் சீரும் சிறப்பும் எய்தித் திகழ இவரது உரை துணை செய்தது என்று கூறுவது வெறும் புகழ்ச்சியன்று. இளம்பூரணர் ஒருவரே ‘உரையாசிரியர்’ என்ற சிறப்புப் பெயரால் தமிழிலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். இவரது பெயரைக் கூறாமல், உரையாசிரியர் என்றே சேனாவரையர் நச்சினார்க்கினியர் முதலியோர் குறிப்பிடுகின்றனர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தில் வேனிற்காதையின் தொடக்கத்தில் “உரையாசிரியரான இளம்பூரண அடிகள்” என்று குறிப்பிடுவதால், இளம்பூரணரே உரையாசிரியர் என்று உணரலாம். சமயம் மயிலைநாதர் இளம்பூரணரைத் துறவி என்று குறிப்பிடுகின்றார். நன்னூலின் பத்துவகை எச்சங்களையும் குறிக்கும் ‘பெயர்வினை’ என்னும் (359) சூத்திரத்திற்கு உரையும் விளக்கமும் எழுதிய பின், “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர் கேள்வி இளம்பூரணர் எனும் ஏதமில் மாதவர் ஓதிய உரை என்று உணர்க” என்று குறிப்பிடுகின்றார். தொல்காப்பியரைப் பனம்பாரனார் பாயிரம் ‘படிமையோன்’ என்று குறிப்பிடுகின்றது. படிமையோன் என்பதற்குத் ‘தவ * ஆராய்ச்சித் தொகுதி. (1948) பக். 398, 399. |