ஒழுக்கத்தையுடையான்’ என்று இளம்பூரணர் பொருள் எழுதுகின்றார். எழுத்ததிகாரத்தின் முதற் சூத்திர விளக்கத்தில், “னகாரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை (மகன் என்ற சொல்லை) உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது” என்று கூறுகின்றார். படிமை என்பது சமண சமயத் துறவிகளின் தவ ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல் என்பர்.1 திகம்பர சமண சமயக் கொள்கையின்படி பெண்கள் நேரே வீடுபேறு அடைய இயலாது. தவம் செய்து, பெண் பிறவி நீங்கி அடுத்த பிறவியில் ஆணாய்ப் பிறந்த பின்னரே வீடுபேறு எய்தமுடியும் என்ற கொள்கை உண்டு. இக்கொள்கைகளை இளம்பூரணர் உரைத்திருப்பதால் இவரைச் சமண முனிவர் என்று கருதலாம். இளம்பூரணர் பெயருடன் அடிகள் என்ற சொல் சேர்ந்து வழங்குவதும் இக்கருத்தினை வலியுறுத்திகின்றது. அகத்திணையியலின் முதற்சூத்திர உரையின் இறுதியில் ‘இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்துகொள்” என்று உரைக்கின்றார். இங்கே இவரது துறவுள்ளம் வெளிப்படுகின்றது. காலம் இளம்பூரணர் தம் உரையில் புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கல விருத்தி ஆகியவற்றிலிருந்து மேற்கோள் தந்து விளக்குவதால் அந்நூல்களுக்குப்பின் வாழ்ந்தவர் எனலாம். இவரது கருத்தை நன்னூலார் மேற்கொண்டிருப்பதால் இவர் காலம் பதினோராம் நூற்றாண்டாக இருக்கலாம். உரையின் இயல்பு இளம்பூரணர் உரை, ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன், முகம்மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகிறது. ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. மிக மிகச் சுருக்கமாகவே தெளிந்த கருத்தைத் கூறி விளங்க வைக்கின்றார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை மதித்தலும், புலமை முதிர்ச்சியும், நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன. இளம்பூரணர் பிற மொழிப்பயிற்சி மிகுதியாக இல்லாதவர்; தமிழ்க் கடலுள் பல கால் மூழ்கித் திளைத்தவர்; தமிழ் மரபு நன்கு 1. சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக். 12-15. |