பக்கம் எண் :

உரையாசிரியர்கள்176

அறிந்த சான்றோர். இவரது தமிழ்நெஞ்சம் பல இடங்களில்
வெளிப்படுகின்றது. இவரைச் சிவஞான முனிவர், ‘தமிழ் நூல் ஒன்றே வல்ல
உரையாசிரியர்’ என்று தொல்காப்பியச் சூத்திரவிருத்தியில் குறிப்பிடுகின்றார்.

     இளம்பூரணர் தம் காலத்தில் வழங்கிய புதிய இலக்கணக்
கொள்கைகளை ஆங்காங்கே கூறிச் செல்லுகின்றார்; தொல்காப்பியத்திற்குப்
பழைய நூல்களில் இருந்து மட்டுமின்றித் தம்காலத்திற்குச் சிறிது முன்னர்த்
தோன்றிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டவும் தயங்கவில்லை.
புறத்திணையியலில், புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்து பல
வெண்பாக்கள் உதாரணமாய்க் காட்டப்படுகின்றன. உவமையியலில் பிற்கால
அணிநூல் கருத்துகள் இடம்பெறுகின்றன. செய்யுளியலில் யாப்பருங்கலம்
போன்ற பிற்கால யாப்புநூல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. பொருளியலை
இவர், அகம் புறம் என்ற இரண்டிற்கும் புறனடை என்று கூறுகின்றார்.

தயக்கமும் ஐயமும்

    தொல்காப்பியர் கருத்தையும் இலக்கணக் கொள்கையையும் தெளிவாகப்
புரிந்துகொள்வதற்கு இவர் பெரிதும் முயன்றுள்ளார். காலயிடையீடும், புதிய
இலக்கணக் கொள்கைகளும் பழைய இலக்கணம் பற்றிய பல வேறு கருத்தும்
இவருக்குத் தயக்கமும் மலைப்பும் உண்டாக்கின என்னலாம். அதனால்
நடுநிலைமை பிறழாத உள்ளம் கொண்ட இவர், தாம் உரைத்த
கருத்துகளையும், பொருளையும் முற்ற முடிந்த முடிபுகளாகக் கருதவில்லை.
பல நூற்றாண்டுகள் கழித்து, அந்நூலின் கருத்தை உள்ளவாறு அறிய
முயன்று, முதன்முதலில் உரை எழுதிய இவர்க்கு இத்தகைய தயக்கமும்
ஐயமும் ஏற்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

     சொல்லதிகாரத்தில், “நிலப்பெயர் குடிப்பெயர்” என்று தொடங்கும்
சூத்திரத்தில் (சொல்-162 இளம்), ‘இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்’
என்ற அடிக்கு “ஒருவர், இருவர், மூவர், என்பன” என்று விளக்கம்
எழுதியபின், “இன்றிவர் என்பது, இத்துணைவர் என்னும் பொருட்டுப்
போலும்” என்று ஐயத்தோடு கூறுகின்றார். மேலும்,

          கல்வியினாகிய காரணம் வந்தவழிக்கண்டு கொள்க.
         அதுபாடமறிந்து திருத்திக் கொள்க.
         வழக்குப் பெற்றுழிக் கொள்க.
         முதல் சினையாவது வந்தவழிக்கண்டு கொள்க.
         ஓகார ஈறும் ஏகார ஈறுமாய் வருவன