பக்கம் எண் :

177ஆய்வு

          விரவுப் பெயர் உளவேற் கண்டு கொள்க.
         செய்ம்மன என்பது இப்போது வழக்கரிது.

என்று எழுதும் இடங்கள் உள்ளன.

     ‘பெயர் நிலைக் கிளவியின்’ (சொல்-443) என்ற சூத்திரத்திற்குப்
பொருளும் விளக்கமும் கூறியபின், “இச் சூத்திரத்திற்குப் பிறிதுமோர்
பொருள் உரைப்பாரும் உளர். இதுவும் மெய்யுரை போலும்” என்று
தயக்கத்துடன் எழுதுகின்றார்.

     பொருளதிகாரம் அகத்திணையியலில் (45), “தலைமகள் கூற்று
உணர்த்திய சூத்திரம், காலப் பழமையால் பெயர்த்து எழுதுவார், விழ
எழுதினார் போலும்” என்று பெரியதோர் ஐயத்தைக் கிளப்பிவிடுகின்றார்.

     கற்பியலில்,

          மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
         கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே

(கற்-3)

என்ற சூத்திரத்தின்கீழ், “இதனால் சொல்லியது, முற்காலத்துக்கரணம்
பொதுப்பட நிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும், பிற்காலத்து வேளாண்
மாந்தர்க்குத் தவிர்ந்தது எனவும் கூறியவாறு போலும்” என்று கூறுகின்றார்.

     செய்யுளியலில் (106), பரிபாடலுக்குரிய “எருத்து என்பது இவ்வாசிரியர்
கருத்தினால் தரவு என்பது போலும்” என்று உரைக்கின்றார்.

     இவை யாவும், இளம்பூரணருக்கு ஏற்பட்ட தயக்கத்தையும் ஐயத்தையும்
விளக்கும் சான்றுகளாகும்.

உரைத்திறன்

    தொல்காப்பிய மூலத்தைக் கொண்டே தொல்காப்பியர் கருத்தை
அறிந்துகொள்ளவேண்டும் என்று கருதுபவர், இளம்பூரணர் செய்த உரை
இல்லாதிருந்தால், பல சூத்திரங்களுக்குப் பொருள் தெரியாமல் மயங்குவர்.
இளம்பூரணர்க்குப் பின்வந்த உரையாசிரியர்களும், இளம்பூரணரையே
பின்பற்றி, இவரது பொருள் விளக்கம்,  மேற்கோள், எடுத்துக்காட்டு
ஆகியவற்றைப் போற்றி மேற்கொண்டு உரை எழுதுகின்றனர். 

     எழுத்ததிகாரத்தில்,

          அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி
         உளஎனப் பட்ட ஒன்பதிற்று எழுத்தே