என்று எழுதி, ‘மகன்-தாய்க்கலாம்’ என்று உதாரணம் காட்டுகின்றார். இந்த விளக்கமும் உதாரணமும் மிகவும் அரியவை. இளம்பூரணர் உரை இன்றேல், இவை வெளிப்பட்டிரா. சொல்லதிகாரத்தில். குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி (சொல். 56) என்ற சூத்திரத்திற்கும், “மிக்கதன் மருங்கின்” (சொல்-237) என்ற சூத்திரத்திற்கும் இளம்பூரணர் உரை இன்றேல் பொருள் அறிதல் அரிது. ‘கடி’ என்னும் உரிச்சொல் முன் தேற்றுப் பொருளில் வந்தமைக்கு அகநானூற்றுப் பாட்டு ஒன்றினை (110) எடுத்துக் கொண்டு, அதில் ‘கடுஞ்சூள் தருகுவன்’ என்று வருவதை மேற்கோளாகக் காட்டியுள்ளார். தமிழிலக்கியத்தில், வேறு எங்கும் இச்சொல் இப்பொருளில் வந்துள்ளதாகக் தெரியவில்லை. இளம்பூரணர் காட்டிய இவ்வரிய மேற்கோளையே பின்வந்த உரையாசிரியர்கள் அனைவரும் தம் உரைகளில் காட்டுகின்றனர். இளம்பூரணர் தந்த மேற்கோளையும் கூறிய விளக்கத்தையும் பின்வந்தோர் அப்படியே மேற்கொண்டமைக்குப் பல சான்றுகள் காட்டலாம். உரையாசிரியர் முயன்று அமைத்த பாதையினைப் பின் வந்தோர் அகலப்படுத்தினர் என்று கூறும் அளவிற்கு இளம்பூரணரின் உரைத்திறன் அமைந்துள்ளது. பொருளதிகாரத்தின் தொடக்கத்தில் (அகத்திணை இயலுக்கு முன்னுரையாக) எழுதும் உரை விளக்கம், அறிவுக்கு விருந்தாய் அமைந்துள்ளது: “நிலம் எனவே, நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குக் காரணமமாகிய ஆகாயமும் பெறுதும்.” “காலமாவது மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும்.” “கருப்பொருளாவது இடத்தினும் காலத்தினும் தோற்றும் பொருள்” “உரிப்பொருளாவது மக்களுக்கு உரியபொருள்”. பரத்தையர் யார் என்பதற்குக் கூறும் விளக்கமும், ஐம் பூதங்களின் சேர்க்கை பற்றிக் கூறும் விளக்கமும் சிறப்பானவை. அவற்றைக் கீழே காண்போம்: |