பக்கம் எண் :

உரையாசிரியர்கள்180

     “பரத்தையர் ஆவார் யார் எனின், அவர் ஆடலும் பாடலும் வல்லராகி,
அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி, ஒருவர் மாட்டும்
தங்காதார்.” (கற்பியல்-10)

     “உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது
முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவி
நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி
ஒன்றானாற் போல வேற்றுமைபடாது நிற்கும்; அவ்விரண்டனையும் உலகம்
உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார்.” (மரபியல் - 91)

சொல்லும் பொருளும்

    உரையாசிரியர் சில சொற்களின் பொருளை நன்கு விளக்கிச்
செல்லுகின்றார். அத்தகைய விளக்கம் ஆராய்ச்சி உலகிற்குப் புதிய ஒளி
தரவல்லவை. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்:

     அம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவர் முகக் குறிப்பினால்
தோற்றுவித்தல். அலராவது சொல்லுதல். (களவியல்-49)

     புலவி அண்மைக் காலத்தது; ஊடல் அதனின் மிக்கது. (கற்பியல்-15)

     மடம் என்பதற்கும் பேதமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின்,
மடம் என்பது பொருண்மை அறியாது திரியக் கோடல்; பேதமை என்பது
கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல். (மெய்ப்பாட்-4)

     மாணாமை என்ற சொல்லிற்கு மிகாமை என்ற பொருள் உரைப்பது
இவரது புலமைச் சிறப்பைக் காட்டுவதாகு்ம்.

          மாண மறந்து உள்ளா நாணிலி

(கலித்-89)

என்றாற் போல மாணாமை என்பது மிகாமை என உரைப்பினும் அமையும்.”
(மெய்ப்-24)

     “ஒப்பும் உருவும்” என்று தொடங்கும் சூத்திரத்தின்கீழ் (பொருளியல்-42)
ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில் முதலிய சொற்களுக்குக் கூறும்
பொருள் கற்று மகிழத்தக்கவை.

     படிமையோன் என்பதற்குத் ‘தவ ஒழுக்கத்தை உடையான்’ என்று
பாயிரப் பகுதியில் பொருள் கூறிய இவரே, “படிமை என்பது ப்ரதிமா
என்னும் வடமொழித் திரிபு” என்று உரைக்கின்றார். (அகத்-30).