யவனர் என்ற சொல்லை ஆரியச் சிதைவு என்று கூறுகின்றார்.* (எழுத்-65) உயர்வு என்ற சொல்லைப் பின்வருமாறு விளக்குகின்றார்: “உயர்வுதாம் பல: குலத்தால் உயர்தலும், தவத்தால் உயர்தலும், நிலையால் உயர்தலும், உபகாரத்தால் உயர்தலும் என. (சொல்-87) “உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினான் உயர்ந்தாரையும் காட்டும், கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும், செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்” (அகத்-3) “பிறப்பே குடிமை” என்னும் சூத்திரத்தின் கீழும் ‘நிம்பிரி கொடுமை” என்னும் சூத்திரத்தின் கீழும் (மெய்ப்-25,6) இவர் பல சொற்களை இனிது விளக்கியுள்ளார். சூத்திர அமைப்பும் உரைப்போக்கும் இளம்பூரணர் இரண்டு சூத்திரங்களாக அமைத்தவற்றைப் பின்வந்தோர் ஒன்றாகவே எழுதி உரைகண்டனர்; ஒன்றாகக் கொண்டதைப் பிரித்து இரண்டாக்கியதும் உண்டு. எழுத்ததிகாரம் பிறப்பியலுள் (19.20), ‘எல்லா எழுத்தும்,’ என்றும் ‘அஃதிவண் நுவலாது’ என்றும் தனித்தனியே இளம்பூரணர் பிரித்து உரை கண்டவற்றை நச்சினார்க்கினியர் ஒரே சூத்திரமாக்கி, உரை எழுதுகின்றார். இத்தகைய எடுத்துக்காட்டுகள் பலவற்றைக் தரலாம். பல சூத்திரங்களை அடுத்து அடுத்து எழுதிக்கொண்டு “இவை, உரை இயைபு நோக்கி ஒன்றாய் எழுதப்பட்டன” என்று இளம்பூரணர் எழுதிச் செல்வதும் உண்டு. (சொல்: 173-176; 223, 224; 337, 338.) மரபியலில் (35), ‘மக்கள் தாமே ஆறறி வுயிரே’ என்ற நூற்பாவிற்குப் பின், ‘ஒருசார் விலங்கும் உளஎன மொழிப’ என்ற நூற்பா இளம்பூரணர் உரையில் மட்டும் உள்ளது. * “யவனர் என்பார் கிரேக்கர். அப்பெயர் அவர்கள் பாஷையில் (ஐயோனீஸ்) ஐயோனியர் என வழங்கும். பழைய வட நூல்களிலும் இவர்கள் யவனர் என்றே வழங்கப் பெறுவர். பழைய தமிழ் இலக்கியங்களில் கிரேக்கரையும் ரோமரையும் பொதுவாக யவனர் என வழங்குவர்.” - செல்வக்கேசவராய முதலியார், தமிழ் (1906) பக்-84. |