உவமைகள் இளம்பூரணர் தம் உரையில் மிகச் சில உவமைகளையே எடுத்தாண்டுள்ளார். அவ்வுவமைகள், கூறக்கருதிய பொருளை இனிது விளக்குகின்றன. எழுத்ததிகாரத்தில் (2), “சந்தனக்கோல் குறுகின விடத்தும் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல, இகர உகரங்கள் குறுகின விடத்தும் அவை உயிர் ஆகாற் பாலன” என்று தக்க உவமை கூறி விளக்குகின்றார். செய்யுளியலில் (79), “துள்ளலோசை கலிப்பாவிற்காம் என்றவாறு. துள்ளுதலாவது ஒழுகு நடைத்தன்றி இடையிடை உயர்ந்து வருதல்: கன்று துள்ளிற்று என்றாற்போலக் கொள்க” என்ற பகுதியில் இனிய உவமை இடம் பெற்றுள்ளது. மரபியலில் (19) கலத்தல், மயக்கம் என்ற சொற்களை “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செப்பும் உருக்கி ஒன்றாதல் போறல்” என்று ஏற்ற உவமைகளைக் கூறி விளக்குகின்றார். பாட வேறுபாடும் கருத்து வேறுபாடும் இளம்பூரணர் தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் ஆதலின், இவர் கொண்ட சில பாடங்கள், மிகப்பழமையானவை; அப்பாடங்களே சிறந்தவை. சில சொற்களில் இரண்டொரு எழுத்துகள் மாறிவிடுவதால், சூத்திரங்களின் பொருளே பெரிதும் வேறுபட்டுவிடுகின்றது. எனவே, பாட வேறுபாடுகளில் கருத்துச் செலுத்தி உண்மையான பாடத்தைத் துணியும் கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது. பாட வேறுபாடுகள், பொருளதிகாரத்தில் மிகுதியாகப் பொருளை வேறு படுத்திவிடுகின்றன ஆதலின் சில பாட வேறுபாடுகளையும் அவற்றால் சூத்திரத்தின் பொருள் வேறுபடுவதையும் கீழே காண்போம்: புறத்திணை இயலுள் (4), மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். இதற்கு நச்சினார்க்கினியர், மறங்கடைக் கூட்டிய துடிநிலை |