என்று வேறு பாடம் கொள்ளுகின்றார். குடிநிலை என்ற பழைய பாடமே சிறந்தது என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி சான்றாக உள்ளது. அதில், வெட்சித் திணையில் மறக்குடியினது நிலைமையும், கொற்றவையின் நிலைமையும் கூறுவதைக் காணலாம்.* பொருளியலுள் நச்சினார்க்கினியர், இறைச்சி தானே பொருட்புறத் ததுவே என்று பாடம் கொண்டுள்ளார். இதுவே இன்று பெருவழக்காய் உள்ளது. இளம்பூரணர், ‘உரிப்புறத்ததுவே’ என்று பாடங் கொண்டுள்ளார். உள்ளுறை உவமம், இறைச்சி முதலிய ஐந்தும் பெரும்பாலும் அகத்திணைப் பாடலுக்கே உரியவையாகும் (பொருள்:45). அகத்திணைப் பாடல்களில் முதல் கரு உரி என்ற மூன்று பொருளும் இடம் பெறும் (அகத்:3). உள்ளுறை உவமம், தெய்வம் ஒழிந்த கருப்பொருளை இடமாகக் கொண்டு பிறக்கும் (அகத்:50). இறைச்சி உரிப்பொருளுக்குப் புறம்பாய் வரும் (பொருள்:43). என்ற தொல்காப்பியர் கருத்துக்களை நினைவில் கொண்டு பார்த்தால் ‘உரிப்புறத்தது’ என்ற பாடம் பொருத்தமாய் இருக்கும். களவியலுள், இருவகைக் குறிபிழைப் பாகிய இடத்தும் ... ... ... ... தொகைஇக் கிழவோன் மேன என்மனார் புலவர் (களவி-17) என்ற சூத்திரம் தலைவனுக்குரிய கூற்றுகளை உணர்த்துவதாய் இளம்பூரணர் கொண்டு, அதற்கு ஏற்ப விரிவுரை எழுதுகின்றார். ஆனால் நச்சினார்க்கினியர், அச்சூத்திரத்தின் இறுதி வரியில் உள்ள ‘கிழவோன்’ என்ற சொல்லுக்குக் ’கிழவோள்’ என்று வேறு * “கொற்றவை நிலையைக் கூறும் ‘மறங்கடைக் கூட்டிய’ என்னும் நூற்பாவில், மற்றதைக்குடிநிலை என இளம்பூரணரும் துடிநிலை என நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டுள்ளனர். குடிநிலையாதெனத் தொல்காப்பியர் கூறாததாலும் அது போர் துவங்குவதற்கு இன்றியமையாத நிகழ்ச்சி அன்றாதலாலும் அது நேரான பாடாமாகாதெனக்கண்ட நச்சினார்க்கினியர் அதைத் துடிநிலை என மாற்றிக் கூறினார் போலும்! துடிநிலை மற்றக் கொற்றவை நிலை கொடிநிலை போல் போர் துவங்குவதற்கு முதல் நிகழ்ச்சியாகாததோடு தொல்காப்பியரும் பிற தொன்னூல்களும் அதனை அத்தகைய வெட்சியின் சிறப்பு வகையாகச் சுட்டாததால் அதுவும் நச்சினார்க்கினியர் கொண்டதன்றித் தொல்காப்பியர் கருத்தாகத் தோன்றவில்லை.” - ச.சோ. பாதியார். பழந்தமிழ்நாடு (1958) பக். 85, 86. |