இந்நூல் தமிழன்னைக்குச் சிறந்த புதிய அணிகலனாகத் திகழும் பெருமை யுடையதாகும். இவர், உரையாசிரியர் ஒவ்வொருவரைப் பற்றியும் நன்கு ஆராய்ந்துள்ளார். ஓர் உரையாசிரியரைப் பற்றிக் கூறும் போது அவரைப்பற்றி இதுவரையில் யார் யார் என்னஎன்ன கூறியுள்ளார் என்பதை எல்லாம் பல நூற்சான்றுகள் கொண்டு விளக்கிச் செல்கின்றார். ஒவ்வொருவரைப் பற்றியும் பல கோணங்களில் ஆராய்ந்துள்ளார். உரை எழுதிய ஆசிரியரின் நுட்பமான கருத்துக்கள், பழைய இலக்கியங்களின் கருத்துக்களையுணர்தற்கு எப்படி உதவுகின்றன என்பதையெல்லாம் அரிய மேற்கோளுடன் விளக்கியுள்ளார். உரை நூல்கள் நமக்கு எப்படிச் சிறந்த பயனை அளித்து வருகின்றன என்பதை இவர் ஒன்பது வகைப்படுத்தி விளக்கியுள்ள முறை போற்றுதற்குரியதாகும். நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் “யாத னுருபிற் கூறிற் றாயினும், பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்” (சொல்-107) என்ற சூத்திரத்தின்கீழ், ‘கொக்கினுக்கொழிந்த தீம்பழம்’ என்புழியும், ‘கொக்கினின்றும்- என ஐந்தாவதன் பொருளாயிற்று’ என்று உதாரணங்காட்டி விளக்கியுள்ளார். இதனால், கொக்கினுக் கொழிந்த தீம்பழம் கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல் தூங்குநீர் குட்டத்துத் துடுமென வீழும் (நற்றிணை - 280) என்ற செய்யுட்பகுதி எப்படித் தெளிவுபெற்றுள்ளது என்பதை இவர் விளக்கத் தவறவில்லை. ‘கொக்கு வந்து இருந்ததனால் கிளை அசைதலின் உதிர்ந்த இனிய மாங்கனியானது ஆழமான நீரிலே துடுமென வீழாநிற்கும்’ என்று நற்றிணையுரையில் எழுதியுள்ளதையும் மேற்குறித்த நச்சியனார்கினியரின் இலக்கணக் குறிப்பையும் இணைத்து நோக்கி இவர் கூறும் முடிவு சிறப்பாக அமைந்துள்ளது. “கொக்கு வந்து உட்கார்ந்ததால் மாங்கனி வீழ்ந்தது என்று கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை; கொக்கு என்ற சொல்லுக்கு மாமரம் என்ற பொருள் உண்டு.‘மாமரத்திலிருந்து உதிர்ந்த இனிய பழம்’ என்ற நச்சினார்க்கினியரின் குறிப்பின்படி பொருள் கொள்வதே பொருத்தமாகவுள்ளது. இத்தகைய சிறந்த பொருள் விளக்கத்திற்கு நச்சினார்க்கினியர் உரை பேருதவி புரிகின்றது” என்ற இவர் விளக்கம் தெளிவுடையதாக - பொருத்தமுடையதாக உள்ளது. |