இக்காலத்து அறிஞர்களின் ஆர்வமும் நினைவும் பற்றி இவர் கூறும் கருத்துக்கள் சிறப்பாக அமைந்து இவர் ஆர்வத்தையும் நினைவையுங்கூடப் புலப்படுத்துகின்றன. “ஒரு நூலுக்கு வழங்கிய பல்வேறு உரைகளையும் தொகுத்துக் காணவேண்டும் என்ற ஆர்வம் இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. பலருடைய கருத்துக்களையும் ஒரே இடத்தில் காணும் வேட்கை பிறந்துள்ளது; உரை வேற்றுமைகளைக் கண்டு நல்லனவற்றையும் அல்லனவற்றையும் சீர்தூக்கும் நோக்கம் வளர்ந்து வருகின்றது. செல்வாக்கு உடையவர்களின் சொல்லை அப்படியே ஏற்கும் நிலை மாறி, நல்லது எது, சிறந்தது எது, பொருத்தமானது எது - என்று ஆராயும் திறன் பெருகி வருகின்றது. புகழ்பெற்ற உரையாசிரியர்களின் பொருந்தாக் கருத்துக்களை மறுக்கும் துணிவு தலை தூக்கியுள்ளது. யார் சொல்கின்றார்கள் என்று பார்க்கும் நிலை மாறி என்ன சொல்லுகின்றார் என்று நுணுகி நோக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது” என்று இவர் கூறும் கருத்துக்கள் கருத்தூன்றிக் காணத்தக்கவையாகும். பழைய உரைகளின் பெருமைகளை இவர் குறிப்பிடும் போது, “பழைய உரைகள் ஆராய்ச்சி உலகத்தின் திறவுகோல்; இலக்கியம் இலக்கணம் கற்க முயன்று தளர்நடைபோடும் மாணாக்கர்களின் கைகளைப் பற்றி நடத்திச் செல்லும் தந்தை; அறிவு செழிக்குமாறு ஊட்டி வளர்க்கும் தாய்; காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து விரும்பிய போதெல்லாம் அறிவுபுகட்டும் பேராசான்” என்று புகழ்ந்து கூறும் இவர் கருத்துக்கள் இக்கால மாணவர்களின் உள்ளத்தில் பதிய வேண்டிய மிக நல்ல கருத்துகளாகும். உரை நூல்களில் இவர்க்குள்ள ஈடுபாட்டை இப்பகுதி இனிது விளக்குவதோடு, இந்த ஈடுபாடே ‘உரையாசிரியர்கள்’ என்ற இந்நூலை இயற்ற இவரைத் தூண்டியது என்பதையும் புலப்படுத்தாமல் இல்லை. ஒவ்வோர் உரையாசிரியரைப் பற்றியும் இவர் எழுதும் போது அவர்தம் உரையின் சிறப்பியல்புகளைப் பல நோக்கோடு ஆராய்ந்து விளக்குகின்றார். இளம்பூரணர் உரை முழுவதையும் நுணுகி ஆராய்ந்து தாம் கண்ட முடிபாக அவர்தம் உரையின் இயல்புபற்றி எழுதியுள்ளார். “இளம்பூரணர் உரை ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உரையுடன்-அருள் பழுத்த நெஞ்சத்துடன் முகம் மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகின்றது. ஆரவாரமும் பகட்டும் இவர் |