உரையில் எங்கும் காண்பது அரிது. மிகமிகச் சுருக்கமாகத் தெளிந்த கருத்தைக் கூறி விளங்க வைக்கின்றார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை மதித்தலும், புலமை முதிர்ச்சியும், நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன” என்று இவர் கூறும் கருத்துக்கள் பலரும் போற்றும் வகையில் அழகாக-இனிமையாக அமைந்துள்ளன. சேனாவரையர் பாடஞ்சொல்லும் ஆசிரியராக இருந்தவர் என்பதையும், படைத்தலைவர் குடியில் பிறந்தவர் என்பதையும் உரையில் அவர் காட்டும் மேற்கோள்களைக் கொண்டே நிறுவியுள்ளமை பொருத்தமிக்கதாக உள்ளது. மேலும் அவர் காட்டும் உதாரணங்களைக் கொண்டு அவர் காலத்து அறநெறிகள், சாதிகள், விளையாட்டுக்கள், மக்கள் வாழ்க்கை நிலை, நாகரிகம் முதலியவற்றைக் கண்டு கூறுகின்றார். உரையாசிரியர்கள் ஒவ்வொருவர் உரையிலிருந்தும் இவ்வாறே அவர் கால இயல்பு இன்னது என்பதைப் பலவகையான் ஆராய்ந்து எழுதியுள்ளமை பாராட்டுதற்குரியதாகும். நச்சினார்க்கினியரைப் பற்றி மிக விரிவாகப் பல நோக்கோடு ஆராய்ந்து பற்பல கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். இப் பகுதி தனி நூலாகவே வெளிவரத்தக்க பெருமையுடையதாக விளங்குகின்றது. “நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பலவேறு கலைகளைக் கற்றுத் துறைபோகியவித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணி பற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு இவற்றை அறிந்தவர். தமிழில் உள்ள இலக்கணம், இலக்கியம், நிகண்டு, காவியம், புராணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக் கலை பற்றியும் போதிய அறிவு இவரிடம் உண்டு. பயிர் வகையும் உயிர் வகையும் பற்றி நிறைய அறிந்தவர்” எனத் தொகுத்துக் கூறி, பின் இவற்றை விரித்தும் எழுதியுள்ளார். நச்சினார்க்கினியரின் உரையென்னும் அமுதக் கடலில் பலமுறை தோய்ந்த உள்ளத்தவர் இவர் என்பதை இவர் கூறும் விளக்கம் நன்கு புலப்படுத்துகின்றது. அடியார்க்கு நல்லார் உரையின் பெருமையை இவர் நன்கு விளக்கியுள்ளார்: “அடியார்க்கு நல்லார் தமிழ்க் கலையின் மாண்பைப் போற்றி விளக்கியுரைத்த குரல், காலங்கடந்து வந்து |