தெளிவாக ஒலிக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடியார்க்கு நல்லார் உரையே பெரிதும் உதவியது. தமிழ்க் கலைகளைப் பல நூற்றாண்டுகளாகக் காத்து வழங்கிய பெருமை இவர் உரைக்கு உண்டு.” “மேலைநாட்டுத் திறனாய்வார்போல அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்துள்ளார். காப்பிய அமைப்பு, கதையின் கட்டுக் கோப்பு, நிகழ்ச்சி ஒருமைப்பாடு, காப்பிய மாந்தரின் பண்புகள், நூலாசிரியரின் ஆழ்ந்திருக்கும் கவியுளம், செயல் நிகழுங் காலஎல்லை, இடம் ஆகியவற்றையெல்லாம் நுணுகி நோக்கி ஆராய்ந்து திறம்படக் கூறுகின்றார்.” என்ற பகுதிகளை உளங்கொண்டு நோக்கின், அடியார்க்கு நல்லார் உரை என்னும் கனிகளைப் பிழிந்து இவ்வாசிரியர் நமக்குக் கொடுக்கும் இனிய பிழிவு இது என்று புகழத்தான் வேண்டியுளது. பரிமேலழகர் உரையின் இயல்பை விளக்கியிருக்கும் கருத்துகளும் ‘குறள் பெற்ற புது விளக்கம்’ என்ற தலைப்பில் இவர் வகுத்துக் காட்டும் உரைப் பகுதிகளும் நினைந்து நினைந்து இன்புறத்தக்கவை. ‘உரையாசிரியர்கள்’ என்ற இந்நூலைப் பொதுப் பகுதி, வரலாறு, சிறப்புப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பகுத்துக் கொள்கின்றார் இவ்வாசிரியர். உரையாசிரியர்களின் வரலாறுகளையும் அவர் உரையின் இயல்புகளையும் பொதுப் பகுதியில் விரிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளார். சிறப்புப் பகுதியில் உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டிய செய்யுள்களின் அருமை பெருமைகளை நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார். ‘கால குருகு’ என்ற தொடர்க்கு உரையாசிரியர் பலரும் தந்துள்ள விளக்கங்களை எல்லாம் தந்து இறுதியில் சிவஞான முனிவர் அச்சொற்றொடரை வழாநிலையாகக் காட்டிப் பொருள் கூறியிருக்கும் முறையை இவர் விளக்கியுள்ளமை சுவை பயப்பதாகும். அவ்வாறே புறப்பாட்டில் வரும் ‘ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே’ என்று தொடங்கும் பாடலில் வரும் ‘நன்னடை நல்கல்’ என்பது’ தண்ணடை நல்கல்’ என்றே இருத்தல் வேண்டும் என்பதைப் பல எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கியிருப்பது இந் நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறனை நன்கு விளக்குகின்றது. |