பக்கம் எண் :

23

     இந்நூலாசிரியர் தொல்காப்பியம் முதலாக உள்ள இலக்கண நூல்களின்
உரைகளையும், சங்க இலக்கியங்களின் உரைகளையும் காப்பிய
இலக்கியங்களின் உரைகளையும், சிற்றிலக்கியங்களின் உரைகளையும், சைவம்
வைணவம் சமணம் முதலிய சமய நூல்களின்  உரைகளையும், புராண
இலக்கியங்களின் உரைகளையும் தம் புலமையுள்ளத்தால் நுணுகி
ஆராய்ந்துள்ளார் என்பதை இந்நூல் நமக்குப் புலப்படுத்துகின்றது. இவர்
இந்த நூலை எழுதுதற்கு மேற்கொண்ட முயற்சியும் உழைப்பும் சிறியன அல்ல
என்பதை இந்நூல் முழுவதையும் ஊன்றிப் படிப்போர் உணராமலிருக்க
வியலாது.

     இந்நூல் முழுவதும் தெளிவான இனிய தமிழ் நடையில் அமைந்துள்ளது.
இவர் உரைநடையில், உயர்திரு டாக்டர் மு.வ. அவர்கள் உரைநடையின்
சாயல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் திருப்பதி நாட்டுமொழிக்
கல்லூரியில் தமிழ் பயிலும்போதே ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கவிதைகளும்
எழுதிப் பற்பல பரிசுகள் பெற்றுள்ளார். எந்த நூலையும் ஆழ்ந்து கற்கும்
இயல்பினர். மாணவப் பருவத்தே இவர்தம் புலமை நலங்கண்டு ஆசிரியர்கள்
மகிழ்வது உண்டு. அக்காலந் தொட்டே தம் விடா முயற்சியால் பற்பல
நூல்களையும் உரைகளையும் முறையுறப் பயின்று, அறிஞர்கள் போற்றும்
வகையான் இந்த விரிவான ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளமைகண்டு மனமிக
மகிழ்கின்றேன். இந்த இளம் பருவத்திலேயே இத்தகைய நூலை இயற்றும்
ஆற்றல் பெற்ற இவர், வருங்காலத்தில் இதனினும் சிறந்த நூல் பல இயற்றித்
தமிழன்னையைச் சிறப்பிப்பார் என்பது என் நம்பிக்கை. இவர் தம் புலமை
தமிழ் மொழிக்கும் நாட்டிற்கும் நன்கு பயன்படப் பொன்னம்பலவன் இவர்க்கு
எல்லா நலன்களையும் நல்குவானாக என அப்பெருமான் திருவடிகளை
வணங்கி வாழ்த்துகிறேன்.

                                           செ.  வேங்கடராமன்