சிறப்புரை வித்துவான் கி.வா. ஜகந்நாதன் எம்.ஏ. தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள், மிகப் பழங்காலந் தொட்டுத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை இயற்றிய ஆசிரியர்களை நூலாசிரியர்கள் என்பார்கள். நூல்களை விளக்கும் ஆசிரியர்கள் இருவகைப்படுவார்கள். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி நூல்களை விளக்கும் ஆசிரியர்களைப் போதக ஆசிரியர் என்பர். நூல்களின் உரைகளை இயற்றிப் பலருக்கும் பயன்படும்படி வழங்கியவர்கள் உரையாசிரியர்கள். நூல்களை மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியர்களுக்கு எத்துணை மதிப்பு உண்டோ அத்துணை மதிப்பு உரையாசிரியர்களுக்கும் உண்டு. இலக்கண நூல்களுக்கு உரைகள் இல்லாவிடின் அவற்றின் பொருளை அறிவது எளிதன்று. தொல்காப்பியத்தில், இலக்கணத்துக்கு உரை இவ்வாறு அமைய வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. இலக்கணமும் இலக்கியமும் சமய நூல்களும் சுருங்கிய சூத்திர வடிவில் அமைந்திருப்பதால், அவற்றின் பொருளை அறிந்துகொள்ள உரைகள் இன்றியமையாதவை. இலக்கிய நூல்களின் பொருளையும் மரபறிந்து, இலக்கண அமைதி தெரிந்து விளக்கவேண்டும். உரையாசிரியர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நூல்களின் பொருள்களை விளக்குவது மாத்திரம் உரையாசிரியர்களின் இயல்பு என்று எண்ணக்கூடாது. நூல்களின் கருத்தை விளக்கும்போது நூலைக் கற்பார் உள்ளம் கொள்ளும்படி பலவித உத்திகளை மேற்கொண்டு விளக்கவேண்டும். நூலாசிரியரின் உள்ளக் கிடக்கையை நன்கு தெரிந்துகொண்டு கருத்தை விளக்குவதோடு, உவமை மேற்கோள் முதலியவற்றையும் காட்டித் தெளிவிக்க வேண்டும். இதுவோ அதுவோ என்று ஐயுறுவதற்குரிய இடங்களில் தக்க காரணங்களைக் காட்டி இன்னதுதான் என்று தெளிபடுத்த வேண்டும். செய்யுள் வழக்கு, உலக வழக்கு இரண்டிலிருந்தும் மேற்கோள்களும் ஒப்புமைகளும் |