பக்கம் எண் :

201ஆய்வு

     கிளவியாக்கத்திற்குப்பின் வேற்றுமையியலையும் அதன்பின் வேற்றுமை
மயங்கியலையும், பின் மற்ற இயல்களையும் வைத்தமை பற்றிச் சேனாவரையர்,
ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும் எழுதும் விளக்கம் படித்து
மகிழத்தக்கதாகும்.

சூத்திரங்களின் அமைப்பு

    “இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின்,....... என்னும் சூத்திரத்தின் பின்
வைக்க எனின்” என்று சேனாவரையர் தாமே வினா எழுப்பிக்கொண்டு
விடை கூறுவதும் உண்டு (67).

     “அவைதாம், தத்தம் பொருள்வயின்” (115) என்னும் சூத்திரத்தின்
இறுதியடியாகிய

     வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்

என்பதைப் பிரித்து, ஒரு சூத்திரமாக உரையாசிரியர் உரைத்ததை எடுத்துக்
கூறி, அவ்வாறு பிரித்தது சிறந்தது அன்று என்று விளக்குகின்றார்.

     அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
     சீர்நிலை திரியாது தடுமா றும்மே
                                                (எச்ச. 407)

என்னும் சூத்திரத்தையும், அதற்கடுத்த சூத்திரத்தின் (408) குறளடியாகிய

     பொருள்தெரி மருங்கின்

என்பதையும் சேர்த்து,

     அடி மறிச் செய்தி
     அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது
     தடுமா றும்மே பொருள்தெரி மருங்கின்

என்று சூத்திரம் அறுப்பாரும் உளர் என்று சேனாவரையர் சுட்டுகின்றார்.

     வேற்றுமைப் பொருளை (83) என்று சூத்திரத்தின் முதல் இரண்டடியை
ஒரு சூத்திரமாகவும், பின் இரண்டடிகளை மற்றொரு சூத்திரமாக உரைப்பாரும்
உளர் என உரையாசிரியர் கூறியதாகச் சேனாவரையர் உரைக்கின்றார்.

     பெயரியலில்,

     அவற்றுள், நான்கே இயற்பெயர்                       (175)

என்னும் சூத்திர உரையின் கீழ், “கூறப்பட்ட பெயரது பாகு பாடாகிய ஒரு
பொருள் நுதலுதல் பற்றிய ஒரு சூத்திரமாயிற்று. நான்காய் விரிதலும்
இரண்டாய் விரிதலும் தாமே யாதலுமாகிய பொருள் வேற்றுமையான் மூன்று
சூத்திரம் எனினும் அமையும்” என்று எழுதுகின்றார்.