பக்கம் எண் :

உரையாசிரியர்கள்202

     “இச் சூத்திரம் வேண்டா எனின்” என்று சேனாவரையரே வினா
எழுப்பிக்கொண்டு, விடைகூறும் இடங்களும் உள்ளன (52,92, 462).

     சூத்திரங்களுக்குரிய ஓசை நயத்திலும் சேனாவரையர் ஈடுபட்டுள்ளார்.
பலமுறை ஓதிஓதிப் பண்பட்ட அவரது செவி நுட்பம் நம்மை வியக்கச்
செய்கின்றது.

     “தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது (63, 199); செய்யுள்
இன்பம் நோக்கி அளபெழுந்து நின்றது (210), செய்யுள் இன்பம்
நோக்கி......என்றார் (295) என்று சேனாவரையர் கூறும் இடங்கள் குறிப்பிடத்
தக்கவையாகும்.

உரைத்திறன்

    தொல்காப்பியர் வகுத்துள்ள இலக்கண விதிகளையும் சூத்திரங்களையும்
சேனாவரையர் தம் நுண்மாண் நுழைபுலம் கொண்டு நுணுகி நோக்கி,
நூலாசிரியர் ஒவ்வொரு சொல்லையும் பொருளாழத்துடன் அளந்து
அமைத்திருக்கின்றார் என்ற கருத்தைப் பல இடங்களில் வற்புறுத்திக்
கூறுகின்றார்.

     வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
     நினையுங் காலைக் காலமொடு தோன்றும்               (198)

என்ற சூத்திரத்திற்குச் சேனாவரையர் எழுதியுள்ள விளக்கம் பலமுறை கற்று
மகிழும் வகையில் உள்ளது:

     “வேற்றுமை கொள்ளாது என்னாது காலமொடு தோன்றும் எனின்,
தொழில் நிலையொட்டும் தொழிற் பெயரும் வினைச் சொல்லாவான் செல்லும்
ஆகலானும் காலமொடு தோன்றும் என்னாது வேற்றுமை கொள்ளாது எனின்,
இடைச் சொல்லும் உரிச்சொல்லும், வினைச்சொல்லெனப்படும் ஆகலானும்
அவ்விரு திறமும் நீக்குதற்கு ‘வேற்றுமை கொள்ளாது, காலமொடு தோன்றும்’
என்றார். வினைச் சொல்லுள், வெளிப்படக் காலம் விளங்காதனவும் உள;
அவையாவும் ஆராயுங்கால் காலம் உடைய என்றற்கு ‘நினையுங்காலை’
என்றார்” என்று சேனாவரையர் எழுதியுள்ள விளக்கம் புலமைக்கு
விருந்தளிக்கின்றது.

     இவ்வாறே “பெண்மை சுட்டிய” (4) என்னும் சூத்திரத்திற்கு இவர்,
சொல்லுக்குச் சொல் நுண்பொருள் கண்டு; உரை எழுதும் திறன் வியந்து
போற்றுதற்கு உரியதாகும்.

ஆராய்ச்சித் திறன்

    சேனாவரையர் தொல்காப்பியரிடம் பெருமதிப்புக் கொண்டவர். தொல்காப்பியர் நூலில், தாம் ஏற்றுக்கொள்ள இயலாத சில இலக்கணக் கருத்துக்கள் இருப்பதைச் சேனாவரையர்