சில இடங்களில் உணர்கின்றார். இருப்பினும், தொல்காப்பியரைக் குறைகூறாமல், தம் கருத்தை எழுதித் தம் ஆராய்ச்சித் திறனைக் காட்டுகின்றார். “எல்லே இலக்கம்” என்பது, இடையியலில் உள்ள சூத்திரம் (சொல்.269). ‘எல்’ என்பதை உரிச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்பது சேனாவரையர் கருத்து. ஆனால் தொல்காப்பியரே அதனை இடைச்சொல் என்று கூறுவதால், சேனாவரையர் தம் கருத்தையும் எழுதி நூலாசிரியரையும் மதிக்கின்றார். “எல் என்பது உரிச்சொல் நீர்மைத்து ஆயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையின், இடைச்சொல் என்று கோடும்” என்று மிகச் சுருக்கமாக எழுதித் தம் சொல்லாராய்ச்சித் திறனை வெளிப்படுத்துகின்றார். மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாகிய “ஒடுவும் ஆனும் இரண்டு வேற்றுமை ஆகற்பால எனின்” என்று சேனாவரையர் வினா எழுப்பிக் கொண்டு ஆராயும் பகுதி, அவருடைய மொழியாராய்ச்சித் திறனை விளக்கும் சிறந்த சான்றாகும். “நும்மின் திரிபெயர் நீயிர்” என்று தொல்காப்பியர் கூறுகின்றார் (எழுத்.326; சொல் 143). ஆனால் சேனாவரையர் “நீயிர் என்பதன் திரிபு நும்” என்னும் கருத்துடையவர். இருப்பினும் தம் இலக்கண ஆராய்ச்சி்த் திறனை வெளிப்படுத்தி, நூலாசிரியரைப் போற்றியே உரை எழுதியுள்ளார் (சொல்.98, 143). இலக்கணக் கொள்கையும் ஆராய்ச்சியும் சேனாவரையர், இலக்கணத்தில் பயின்றுவரும் சொற்றொடர்களையும் கொள்கைகளையும் நுணுகி ஆராய்ந்து விளக்குகின்றார். சில சொற்றொடர்களின் வரலாறு, வழக்கு, வடிவம், பொருள் ஆகியவற்றை நன்கு சிந்தித்து நல்ல முடிவுகளை வெளியிடுகின்றார். ‘என்மனார்’ என்னும் சொல்லுக்கும் (1), ‘மார்’ ஈற்று வினைச் சொல்லுக்கும் (7) இவர் கூறும் இலக்கண விளக்கம் படித்து மகிழத்தக்கது. ‘எவன்’ என்னும் வினாச்சொல் பற்றி விளக்கம் எழுதியபின், ‘எவன் என்பதோர் பெயரும் உண்டு; அஃது இக்காலத்து என் என்றும், என்னை என்றும் நிற்கும். ஈண்டுக் கூறப்பட்டது வினைக்குறிப்பு முற்று என்க” (219) என்று ஆராய்ந்து கூறுகின்றார். ‘எய்யாமை’ என்றும் சொல்லைப்பற்றி “அறிதற்பொருட்டால் எய்தல் என்றானும், எய்த்தல் என்றானும் |