பக்கம் எண் :

உரையாசிரியர்கள்204

சான்றோர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர் மறையன்மை அறிக”
(342) என்று எழுதுகின்றார்.

     ‘இலம்பாடு’ என்னும் சொல்லைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகின்றார்;
‘இலம் என்னும் உரிச்சொல், பெரும்பான்மையும் பாடு என்னும் தொழில்
பற்றியல்லது வாராமையின் இலம்பாடு என்றார்” (360).

     “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (372) என்னும் சூத்திரத்தின்
கீழ், “கறுமை, செம்மை என்னாது கறுப்பு சிவப்பு என்றதனான்
தொழிற்பட்டுழியல்லது அவை வெகுளி உணர்த்தாமை கொள்க” என்று
விளக்குகின்றார்.

     ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ (452) என்பதன் கீழ், சம்பு,
சள்ளை, சட்டி, சமழ்ப்பு என்பவை பிற்காலத்தே தோன்றிய சொற்கள் என்று
குறிப்பிடுகின்றார்.

இலக்கண விளக்கம்

    இலக்கணத் தொடர்களையும் கொள்கைகளையும் சேனாவரையர் திறம்பட
விளக்குகின்றார்:

     கிளவியாக்கம்:  “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக்
கொண்டமையான், இவ்வோத்து கிளவியாக்கம் ஆயிற்று. ஆக்கம்-அமைத்துக்
கோடல்.” (1)

     இரட்டைக் கிளவி: “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது, மக்கள்
இரட்டை, விலங்கு இரட்டை போல, வேற்றுமை உடையனவற்றை அன்றி,
இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும்
உடையனவற்றை என்று உணர்க” (48).

     முக்காலம்: இறப்பாவது, தொழிலது கழிவு. நிகழ்வாவது, தொழில்
தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.
தொழிலாவது, பொருளினது புடைபெயர்ச்சியாகலின், அஃது ஒரு கணம்.
நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின், நிகழ்ச்சி என்பது ஒன்று அதற்கு
இல்லையாயினும், உண்டல், தின்றல் எனப் பல்தொழில் தொகுதியை ஒரு
தொழிலாகக் கோடலின், உண்ணாநின்றான், வாராநின்றான், என நிகழ்ச்சியும்
உடைத்தாயிற்று என்பது” (200).

     இடைச்சொல்: சார்ந்துவருதல் உரிச்சொற்கும் ஒத்தலின், தமக்கெனப்
பொருளின்மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாம்” (249).