பக்கம் எண் :

205ஆய்வு

சொல்லும் பொருளும்

    சில சொற்களுக்குச் சேனாவரையர் கூறும் பொருள் சிறப்பாக உள்ளது.

     ‘காலம்’ என்பது காலக் கடவுளை.

     ‘உலகம்’ என்றது ஈண்டு மக்கள் தொகுதியை.

     ‘பால்வரை தெய்வம்’ என்பது எல்லார்க்கும் இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுப்பது.

     ‘வினை’ என்பது அறத்தெய்வம்.

     ‘சொல்’ என்பது நாமகளாகிய தெய்வம் (57).

வடமொழிப் புலமையும் பற்றும்

    சேனாவரையர் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதைப்
போலவே, வடமொழி இலக்கணத்திலும் வல்லவராக விளங்குகின்றார்.
இருமொழியிலும் வல்லவரான சிவஞான முனிவர், இவரை ‘வடநூற்கடலை
நிலைகண்டு உணர்ந்த சேனாவரையர்’ என்று வாயாரப் புகழ்ந்து
போற்றுகின்றார். வடமொழி பயின்றவர் என்றோ, கற்றவர் என்றோ புலமை
பெற்றவர் என்றோ கூறாமல், வடநூற்கடலை நிலைகண்டு உணர்ந்தவர் என்று
கூறியுள்ளதால், சேனாவரையருக்கு அம்மொழியில் அளப்பரிய பேராற்றல்
இருந்தது என்பது விளங்கும்.

     அங்ஙனம் புகழ்வதற்கு ஏற்பச் சேனாவரையர், வடமொழி இலக்கணக்
கொள்கைகளைத் தெளிவாக விளக்குகின்றார்; வடமொழி இலக்கண விதிகளை
மேற்கோள் காட்டுகின்றார்.

     அதிகாரம் (1), ஞாபகம், அநுவாதம் (10), யோக விபாகம் (11), உத்தரம்
(13), நேயம் (55), காரகம் (112), கரும கருத்தன் (246), தாது (246) ஆகிய
வடமொழிச் சொற்களை, தக்கஇடங்களில் எடுத்தாண்டு விளக்கியுள்ளார்.

     பிரயோக விவேக நூலாசிரியர், ‘வாக்கிய பதீயம், அரிபீடிகை,
ஏலாராசீயம் முதலாயின வழங்குங் காலத்து அவ்வுரை நோக்கிச்
சேனாவரையர் முதலாயினார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினார் என்க”
என்று கூறுகின்றார் (திங்ஙு-16).

     பின்னங்குடி ச.சுப்பிரமணிய சாஸ்திரியார் சேனாவரையர் உரையில்
உள்ள வடநூற் கருத்துக்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
1 அவற்றைக்
காண்போம்:


 

1. தொல்காப்பியம் சொல்லதிகார உரை - முன்னுரை.