பொருவாகலானும்” (401) என்றும், “நீர்’ என்பது ஆரியச் சிதைவு” (398) என்றும் கூறுகின்றார். இத்தகைய கருத்துகளை இன்றைய ஆராய்ச்சி உலகம் ஏற்றுக்கொள்வதில்லை. மறுப்பு சேனாவரையர், இளம்பூரணர் கொள்கைகளை ஐம்பதிற்கு மேற்பட்ட இடங்களில் மறுத்து, வேறு உரை கூறுகின்றார். இளம்பூரணரை உரையாசிரியர் என்றே எங்கும் குறிப்பிடுகின்றார். அவரிடம் பெருமதிப்பும் அச்சமும் கொண்டவராய் நயமாகத் தம் கருத்தை உரைக்கின்றார். இளம்பூரணர் உரைப் போக்கினை நன்கு உணர்ந்துள்ளார். அவரது கருத்தையும் கொள்கையையும் கசடறத் தெளிந்துள்ளார். இளம்பூரணர் கருத்தை அடியொற்றி, உரையாசிரியரும் இங்ஙனே கூறினார் என்று சேனாவரையர் போற்றும் இடங்களும் உண்டு. உரையாசிரியர் கருத்தை மறுக்கும்போது, போலி உரை என்றும், பிறர் மதம் மேற்கொண்டு கூறினார் என்றும், அவர்க்கு அது கருத்து அன்று என்றும், நூலாசிரியர்க்குக் கருத்து அன்மையின் உரையாசிரியர்க்கும் அது கருத்து அன்று என்றும் கூறி மறுத்துச் சேனாவரையர் தம் கருத்தை நிறுவுகின்றார். இவற்றை உற்று நோக்கும்போது, சேனாவரையர் காலத்தில் இளம்பூரணர் உரைக்குப் போலியாக வேறு உரை ஒன்று இருந்ததோ என்ற ஐயம் எழாமல் இல்லை. இன்றுள்ள இளம்பூரணர் உரையில், இரண்டு இடங்கள் (66, 114) சேனாவரையர், உரையாசிரியர் உரையாகக் குறிப்பிடும் பகுதிகள் இல்லை. சில இடங்களில் (242, 285, 403) என்பாரும் உளர் என்று, பெயர் கூறாமல் சுட்டப்படும் பகுதி இளம்பூரணர் உரையில் காணப்படுகின்றன. சேனாவரையர் காலத்தில் (இளம்பூரணர் உரை தவிர) வேறு சில உரைகளும் வழங்கிவந்தன என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. சேனாவரையர் அவ்வுரைகளை இயற்றியவர் ஊர் பேர் எதுவும் கூறாமல் என்பாரும் உளர் (37, 59, 74, 163, 182, 249, 250; 255, 316; 397, 407, 416, 420, 422; 440, 441, 450, 451, 452, 455) என்று குறிப்பிடுகின்றார். நூல்களும் புலவர்களும் சேனாவரையர் பல தமிழ் நூல்களையும் புலவர் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் என்றும், |