பக்கம் எண் :

உரையாசிரியர்கள்208

     சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப்
     பரமா சாரியன் பதங்கள்
     சிரமேற் கொள்ளுதும்

என்றும் அகத்தியரைப் போற்றுகின்றார். மேலும், முனிவன் அகத்தியன் (41),
அகத்தியனால் தமிழ் உரைக்கப்பட்டது (73), யா பன்னிரு மாணாக்கர் உளர்
அகத்தியனார்க்கு (279), அகத்தியம் முதலாயின எல்லா இலக்கணமும்
கூறலின் (463) என வரும் இடங்கள் சேனாவரையர் அகத்தியரைப் பற்றிக்
கொண்ட கொள்கையினை விளக்கும்.

     திருக்குறளைப் பல இடங்களில் மேற்கோளாகக் காட்டி, சேனாவரையர்
இனிது விளக்குகின்றார். திருவள்ளுவரைத் ‘தெய்வப் புலவன்’ (41) என்று
அழைக்கின்றார். ‘இகழ்ச்சியிற் கெட்டான் மகிழ்ச்சியின் மைந்துற்றான்’ என்று
திருக்குறளை நினைவில் கொண்டு உதாரணம் காட்டுகின்றார். (78).
தொல்காப்பியச் சூத்திரங்களை மேற்கோள் காட்டும் இடம் பல உண்டு.
பத்துப்பாட்டு, மலைபடுகடாத்திலிருந்து மிகுதியான மேற்கோள் தருகின்றார்.
இவர் காலத்தில் அணியிலக்கணம் செல்வாக்குப் பெற்றுப் பரவி இருந்தது
என்பதற்குச் சான்றுகள் உண்டு.

     கபிலரால் செய்யப்பட்ட நூலைக் ‘கபிலம்’ என்றும், ‘பரணரது
பாட்டியல்’ என்றும், இவர் குறிப்பிடும் நூல்கள் (114) மறைந்து போயின.

நன்னூலாரும் சேனாவரையரும்

    சேனாவரையர் நன்னூலார் கருத்துக்களைத் தம் உரைகளில் ஆங்காங்கே
சுட்டிச் செல்லுகின்றார்.

     ‘புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உள எனக்
கொள்க’ (452) என்று சேனாவரையர் கூறுவது,

     பழைய கழிதலும் புதியன புகுதலும்
     வழுவல கால வகையி னானே
                                                (நன்.-462)

என்ற நன்னூல் சூத்திரத்தை நினைவூட்டுகின்றது.

     202 ஆம் சூத்திர உரையில், உண்கின்றனம், உண்கின்றாம்
என்பனவற்றை உதாரணங் காட்டுகின்றார். மற்றோர் சூத்திர உரையில் (229),
உண்பாக்கு, வேபாக்கு ஆகிய சொற்களைச் சுட்டுகின்றார். 215 ஆம் சூத்திர
உரையில், “அளபெடை தன்னியல்பு மாத்திரையில் மிக்கு, நான்கும் ஐந்தும்
மாத்திரை பெற்று நிற்கும்” என்று கூறுகின்றார். இவையாவும் நன்னூலார்
கருத்துக்களாகும்.