பக்கம் எண் :

209ஆய்வு

பேச்சு வழக்கும் உலகியலும்

    சேனாவரையர், தம் காலத்து மக்கள் பேசிய முறையை உலகியலோடு
பல இடங்களில் குறிப்பிடுகின்றார். அவை இவர் மக்களுடன் நெருங்கிப்
பழகியவர் என்பதையும், உலகத்தோடு ஒட்ட ஒழுகியவர் என்பதையும்
அறிவிக்கும்.

     கிளவியாக்கத்துள், “ஆக்கம்-அமைத்துக்கோடல்; நொய்யும் நுறுங்கும்
களைந்து அரிசி அமைத்தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்று
எழுதுகின்றார் (சொல்.1).

     ‘மற்றையது’ என்னும் சொல், இனம்குறிக்கும் என்பதற்கு, “ஆடை
கொணர்ந்தவழி, அவ்வாடை வேண்டாதான் மற்றையது கொணா என்னும்”
என்று பேச்சு வழக்கினைக் குறிப்பிடுகின்றார் (264).

    இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
    விரைந்த பொருள என்மனார் புலவர்-241

என்ற சூத்திரத்திற்கு, “சோறு பாணித்தவழி உண்ணா திருந்தானைப் போகல்
வேண்டும் குறியுடையான் ஒருவன், ‘இன்னும் உண்டிலையோ?’ என்றவழி,
‘உண்டேன், போந்தேன்!’ என்னும்” என்று மக்கள் பேச்சினை
எடுத்துக்காட்டுகின்றார்.

     வினாவாக வரும் வினைச்சொல், எதிர்மறைப் பொருளில் வரும்
என்பதற்கு, “கதத்தானாக-  களியானாக ஒருவன் தெருளாது வைதான்;
அவன் தெருண்டக்கால், வையப்பட்டான் ‘நீ என்னை வைதாய்!’ என்றவழி,
தான் வைததை உணராமையான் ‘வைதேனே?’ என்னும்” என்று உதாரணம்
காட்டுகின்றார். (244).

     காலம் மயங்கி வருவதற்கு, ‘நாளை அவன் வாளொடு வெகுண்டு
வந்தான்; பின் நீ என் செய்குவை எனவரும்’ என்பதைக் காட்டுகின்றார் (247).

     குறிப்பால் உணர்த்தும் பொருளுக்கு “அவல் அவல் என்கின்றன நெல்;
மழை மழை என்கின்றன பைங்கூழ்” என்று எடுத்துக்காட்டுகள் தருகின்றார்.

     அவர் காலத்தில் வாய்மொழி வாயிலாக வழங்கிவந்த நாட்டுக்கதை
ஒன்றினைக் கூறுகின்றார். ‘தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும்’ (449)
என்பதற்கு, ‘முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன
இயைந்தனவாய் வருவனவும்’ என்று பொருள் எழுதிக் கீழே உள்ள
கதையைச் சுட்டுகின்றார்;

     ஆற்றோரம் இருந்த ஓர் ஊரில், வாழ்ந்துவந்த எருமை ஒன்று, ஆற்று
வெள்ளத்தில் மூழ்கி இறந்து நாற்றம் மிகுதியாக