சிறப்புடன் விளங்கின என்பதை “உறையூர்க்கு அயல் நின்ற சிராப்பள்ளிக் குன்றை உறையூர்க்கண் குன்று என்றும்” என அவர் கூறுவதால் உணரலாம் (82). மங்கலம் என்ற சிற்றூரை ‘மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும்’ (278) என்று குறிப்பிடுகின்றார். அறநெறிகள் சேனாவரையர், தம் காலத்தில் ஊர்தோறும் கோயில் இருந்தது என்பதை, ‘ஊரானோர் தேவகுலம் (427) என்ற உதாரணத்தால் நினைவூட்டுகின்றார். கன்னியா குமரித் தீர்த்தமாடி வந்த துறவிகள் “குமரியாடிப் போந்தேன்; சோறு தம்மின்” என்று கூறி, இல்லந்தோறும் அன்னம் ஏற்று உண்டனர் (13). ‘அறம் செய்த துறக்கம் புக்கான்’ (57), ‘மழை பெய்தற்குக் கடவுளை வாழ்த்தும் (232), நாகர்க்கு நேர்ந்த பலி (99) என்ற உதாரணங்கள் நினைக்கத் தக்கவையாகும். மகளிர் “அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமையின், ஆடுஉ அறிசொல் முற் கூறப்பட்டது” (2) என்று சேனாவரையர் கூறுவது, அக்காலச் சமுதாயத்தின் குரல் ஒலியோ என்று எண்ண இடம் தருகின்றது. அக்கால மகளிர் கடுக்கலந்த கைபிழி எண்ணெய் பூசித் தம் கூந்தலை நன்கு வளர்த்தனர் (21); தாம் வளர்த்த கிளிக்கு நங்கை என்றும், எருதுக்கு நம்பி என்றும் செல்லப் பெயரிட்டு அழைத்தனர் (449). அவர்கள் சமையற் கலையில் தேர்ந்து விளங்கினர் என்பதை, ‘சுவையாறும் உடைத்து இவ்வடிசில்’ (33), சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள்; அதனால் கொண்டான் உவக்கும் (40) என்ற எடுத்துக்காட்டுகள் நன்கு உணர்த்துகின்றன. சாதிகள் அந்தணரைப்பற்றிப் பல உதாரணங்களைச் சேனாவரையர் காட்டுகின்றார்: பார்ப்பனச்சேரி (49), நான்மறை முதல்வர் (33), அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான் (75), அசரன் ஆ கொடுக்கும் பார்ப்பான் (234), ஓதும் பார்ப்பான் (234), பார்ப்பான் கள்ளுண்ணான் (161)-இவை அக்காலச் சமுதாய நிலையை நமக்கு உணர்த்துகின்றன. போர்ச்செய்திகள் முற்காலப் போர்முறையை உணர்த்தும் உதாரணங்களைச் சேனாவரையர் காட்டுகின்றார். அவர், படைத்தலைவர் குடியில் பிறந்தவர் என்பதை அவை நமக்கு அறிவிக்கின்றன. |