பக்கம் எண் :

உரையாசிரியர்கள்214

யாது? (32); எருது இரண்டும் மூரி (33), நம்பி நூறு எருமையுடையவன் (50);
ஏர்ப்பின் சென்றான் (82); கருப்பு வேலி (104).

     சேனாவரையர் காலத்தில், ‘குழிப்பாடி’ என்னும் இடத்தில் நெய்த
ஆடை சிறந்து விளங்கிற்று (114, 115). அழுக்குப்படிந்த ஆடையைத் தூய்மை
செய்து கூலி பெறும் வழக்கம் அக்காலத்திலும் இருந்தது (234). இதனை
ஆடையொலிக்கும் கூலி என்று சேனாவரையர் குறிக்கின்றார்.

     பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு
செல்லக் கழுதை பயன்பட்டது. ‘சூலொடு கழுதை பாரம் சுமந்தது’ (74)
என்பது சேனாவரையர் காட்டும் உதாரணம்.

     நாணயத்தைப் பரிசோதிப்பவர் (வண்ணக்கர்), குழுஉக்குறியாகப்
பொற்காசை (காணத்தை) நீலம் என்று வழங்கினர் (16).

     ‘இரும்பு பொன்னாயிற்று’ (142) என்ற உதாரணம் இரசவாதக் கலையை
நமக்கு நினைவூட்டுகின்றது.

     அக் காலத்தில் பொற்கொல்லர், பொன்னைக்கொண்டு அரைஞாண்
கயிறு (கடிசூத்திரம்) செய்தனர் (76).

பொது

    உணவு, அணிகலன், இசைக்கருவி, படை ஆகியவற்றில் அக்காலத்
தமிழ்மக்கள் பெரிதும் தேர்ச்சி பெற்று விளங்கினர் என்பதைப் பின்வரும்
உரைப்பகுதி விளக்கும்:

“அடிசில் என்பது, உண்பன தின்பன பருகுவன நக்குவன என்னும்
நால்வகைக்கும்;

அணி என்பது, கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னும்
தொடக்கத்தனவற்றிற்கும்;

இயம் என்பது, கொட்டுவன ஊதுவன எழுப்புவன என்னும்
தொடக்கத்தினவற்றிக்கும் பொதுவாகலின், அடிசில் அயின்றார் மிசைந்தார்
எனவும், அணி அணிந்தார் மெய்ப்படுத்தினார் எனவும், இயம் இயம்பினார்
படுத்தார் எனவும், வழங்கினார் தொட்டார் எனவும் பொது வினையால்
சொல்லுக (46).”

5. பேராசிரியர்

     பேராசிரியர் என்ற பெயருடன் தமிழிலக்கிய உலகில் பலர் உள்ளனர்.
தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு உரை வகுத்த பேராசிரியர், பல
ஆண்டுகளாக நன்கு அறிமுகமானவர்.