பொருளதிகாரம் பின்னான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை உள்ளது. ஆதலின் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராக-கற்றவர் நெஞ்சத்தில் நிலையான இடத்தைப் பெற்றவராக இவர் விளங்குகின்றார். பேராசிரியர் என்ற பெயருடன் உள்ள வேறு பல ஆசிரியர்களை இனிக் காண்போம். 1. திருக்கோவையார் உரை எழுதிய பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை எழுதியவர் பேராசிரியர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றார். திருக்கோவையார் உரையில் பல இடங்களில் இலக்கண மேற்கோளாக, தொல்காப்பியச் சூத்திரங்களைக் காட்டுகின்றார். அவ்விடங்களில் தொல்காப்பியத்திற்கு உரைசெய்ததாய் எவ்விதக் குறிப்பும் காட்டவில்லை. மேலும், பொருளதிகார உரையாசிரியராகிய பேராசிரியர் செய்யுளியலில் (155) “இனி, கோவையாக்கி எழுத்து எண்ணி அளவியற்படுத்துச் செப்பினும் அவையேயாம்” என்று குறிப்பிட்டு, ‘காண்பான் அவாவினால்’ என்று தொடங்கும் கோவைச் செய்யுள் ஒன்றைக் காட்டுகின்றார். எவ்விடத்திலும் திருக்கோவையார் செய்யுள் ஒன்றையும் மேற்கோள் காட்டவில்லை. ஆதலின் திருக்கோவையார் உரையாசிரியராகிய பேராசிரியர் வேறு ஒருவர் என்று கருத வேண்டியுள்ளது. 2. பொதுப்பாயிரம் செய்த பேராசிரியர் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், வடவேங்கடம் தென்குமரி என்னும் சிறப்புப் பாயிரம் செய்தார் பனம்பாரனார் எனவும், வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன் எனவும் பாயிரம் செய்தான் பெயர் கூறியவாறு” என்று மரபியலில் (98) கூறுகின்றார். தம் பெயரையே ஆத்திரையன் பேராசிரியன் என்று படர்க்கையாக வைத்துக் கூறார் ஆதலின், ஆத்திரையன் பேராசிரியன் என்பவர் வேறு ஒருவர் என்று உணரலாம். அவர் செய்த பொதுப்பாயிரம் தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு உரை வகுத்த பழைய உரையாசிரியர்களாகிய இளம் பூரணரோ, நச்சினார்க்கினியரோ வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரத்தைக் கூறித் தம் உரையைத் தொடங்கவில்லை. பிற்காலத்தில் தொல்காப்பியச் சூத்திர விருத்தி இயற்றிய |