5. பேராசிரியர் நேமிநாதர் ‘தமிழ் நாவலர் சரிதை’யில் ஒட்டக்கூத்தர் உலாப் பாடிய போது, பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியது என்ற தலைப்புடன் ஒரு செய்யுள் காணப்படுகிறது. நேமிநாதர் என்பவருக்கும் பேராசிரியர் என்ற பெயர் வழங்கியது என்பதை இதனால் அறியலாம். 6. தொல்காப்பிய உரையாசிரியர்-பேராசிரியர் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர், கடல் போல் பரந்த புலமையுடையவர். இவரது புலமைத் திறனைத் தொல்காப்பியம் பொருளதிகார உரையில் கண்டு வியக்கலாம். இப் பேராசிரியர் தம் உரைகளில் நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலம் ஆகிய நூலாசிரிர்களின் கருத்துகளை எடுத்துக் கூறி மறுக்கின்றார். எனவே, இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்னலாம். மேலும், இவர் செய்யுளில் உரையில் (செய். 149), கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே என்னும் கொன்றைவேந்தன் செய்யுளை மேற்கோள் காட்டுகின்றார். மூதுரை என்னும் நீதிநூலிலிருந்து, ‘அட்டாலும் பால் சுவை’ என்ற பாடலையும் மேற்கோள் காட்டுகின்றார். இவை பேராசிரியரின் காலத்தை அறிவிக்கும் தக்க சான்றுகளாய் உள்ளன. பேராசிரியர் அடிச்சுவட்டில் பேராசிரியர் என்பது கல்வி ஒழுக்கம் ஆகியவற்றால் சிறந்து விளங்கியவரைக் குறிக்க எழுந்த பெயர். இவரது இயற்பெயர் இன்னதென்று அறிய முடியவில்லை. நச்சினார்க்கினியர் தம் உரைகளில் பேராசிரியர் என்ற பெயரையே வழங்குகின்றார். பேராசிரியரைப் பின்பற்றி நச்சினார்க்கினியர் உரை எழுதும் இடங்கள் பல உண்டு. இருவர் உரைகளையும் ஒப்பிட்டுக் காணச் செய்யுளியல் ஒன்றே துணை புரிகின்றது. அவ்வியலுக்கு அமைந்துள்ள இருபெரும் உரையாசிரியர்களின் உரையை ஒப்பிட்டு நோக்கினால், பேராசிரியர் பெருமை புலனாகும்; பேராசிரியரின் அடிச்சுவட்டினையே நச்சினார்க்கினியர் பெரிதும் பின்பற்றி நடக்கின்றார் என்பது விளங்கும். உரை எழுதும் முறை, சொல்லும் வகை, சொற்பொருள் உரைக்கும் திறன், மேற்கோள் ஆட்சி, உரைநடைப் போக்கு ஆகிய எல்லாவற்றிலும் நச்சினார்க்கினியர் பேராசிரியரையே பின்பற்றுகின்றார். |