சமயம் பேராசிரியர் வேதம் கூறும் வைதிக நெறியைப் பின்பற்றுபவர். செய்யுளியலில் (109) ‘வாழ்த்தப்படும் பொருளாவன-கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன’ என்று கூறுகின்றார். இங்கே வைதிகச் சமயச் சாயலைக் காணலாம். செய்யுளியலில் பாடல், கலிப்பா ஆகியவற்றின் வகைகளுக்கு உதாரணமாக இவர், எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடலிலிருந்தும், கலித்தொகை கடவுள் வாழ்த்தையும் மேற்கோள் காட்டுகின்றார். அப்பாடல்கள் திருமால், முருகன், சிவன் ஆகிய தெய்வங்களையும் பரவும் பாடல்களாகும். இவையேயன்றி இவர் காட்டும் வேறு சில தனிப்பாடல்களும் (பரிபாடலின் வகைகள்) மேற்கூறிய தெய்வங்களைப் பற்றியவையேயாகும். மரபியலில் (94), வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்ற சூத்திரத்திற்கு எழுதிய விளக்கத்தில், ‘பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும்’ என்று கூறுகின்றார். இவையாவும் இவர் வைதிக நெறியைப் பின்பற்றுபவர் என்பதை உணர்த்துவனவாகும். மறந்துபோன உரைப்பகுதிகள் பேராசிரியர், பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப் பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது. “அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்-189) “காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்-18) “அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்-19) “முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்’ (செய்-1) ‘முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்’ (செய்-80) என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர் அகத்திணை இயலுள் (46), ‘பேராசிரியரும் இப்பாட்டில் மீன்எறி |