கருத்துகளை இவர் கூறுகின்றார். தலைவிக்கு உரிய மெய்ப்பாடுகளை வகைப்படுத்தி, புணரும்முன் தோன்றும் மெய்ப்பாடு, களவிற்குரிய மெய்ப்பாடு, கற்பிற்குரிய மெய்ப்பாடு என்று தெளிவாக விளக்குகின்றார். உவம இயலில் உள்ளுறை உவமம், இறைச்சி பற்றி இவர் கூறும் கருத்துகள் சிறப்பாகவும் விளக்கமாகவும் அமைந்துள்ளன. இளம்பூரணர், ஏனை உவமத்திற்கு உரிய சூத்திரங்களாகக் கொண்டவற்றுள் சிலவற்றைப் பேராசிரியர் உள்ளுறை உவமத்திற்கு உரியவையாக்கி உரைஎழுதியுள்ளார். மாறுபட்ட இடங்களை மிக நயமாக மறுக்கின்றார். இது இவருக்கு உள்ள சிறப்பியல்புகளுள் ஒன்று. ‘அவர் அறியார்; அவ்வாறு சூத்திரம் செய்வது ஆசிரியர் கருத்து அன்று’ (செய்-101); அவ்வாறு கூறுவார் செய்யுள் அறியாதார் (செய்-130); தலைகுலுக்கி வலியச் சொல்லினும் தன்சீர் இன்மையின் என மறுக்க (செய்-108); நாலசைச்சீர் கொண்டாரும் உளர், ஐயசைச்சீர் கொண்டாரைக் கண்டிலம் (செய்-12) என்று இவர் மிக நயமாக மறுக்கின்றார். தமக்கு முன் இருந்த உரையாசிரியர்களின் பெயரையோ நூலாசிரியர்களின் பெயரையோ இவர் கூறுவதில்லை. கருத்துகளை மட்டுமே கூறி மறுக்கின்றார். இளம்பூரணர், மிகச்சுருக்கமாக எழுதிச் சென்றுள்ள இடங்களை எல்லாம் இவர் நன்கு விளக்கியுள்ளார். மெய்ப்பாட்டியலின் முதற்சூத்திர உரையில், பண்ணைத் தோன்றிய என்பதற்கு ‘விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய’ என்று இளம்பூரணர் எழுதுகின்றார். பேராசிரியர், ‘முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய’ என்று விளக்கமாக எழுதுகின்றார். பேராசிரியர் தொல்காப்பியரை, தொல்காப்பியன் என்றும், என்றான் ஆசிரியன் என்றும் ஆசிரியன் என்றும் ஒருமையிலேயே வழங்குகின்றார். பழமையும் புதுமையும் பழைய மரபையும், பழைய நூற்கொள்கைகளையும் பேராசிரியர் பெரிதும் போற்றுகின்றார். புதிய நூல் வழக்கையும் கொள்கைகளையும் கடிந்து ஒதுக்கி விடுகின்றார். “அவை சான்றோர் செய்யுள் அல்ல என மறுக்க” (செய்-8) “அங்ஙனம் வந்தது பிற்காலத்துச் செய்யுள் என்க” (செய்-17) |