‘இவரொடு (தொல்காப்பியர்) மாறுபடுதல் மரபன்று என மறுக்க’ (செய்-17). இவ்வாறு இவர் புதிய மரபை ஒதுக்குகின்றார். “பிற்காலத்தில் செய்த நூல்பற்றி முற்காலத்துச் செய்யுட்கு எல்லாம் இலக்கணம் சேர்த்துதல் பயமின்று” (செய்-17). ‘தமிழ்நூலுள்ளும் தமது மதத்துக்கு ஏற்பன முதல் நூல் உள என்று இக் காலத்துச் செய்து காட்டினும் அவை முற்காலத்து இல் என்பது, முற்கூறிவந்த வகையான் அறியப்படும்’ (மரபி-94). “காலந்தோறும் வேறுபட வந்த அழிவழக்கும் இழிசினர் வழக்கும் முதலாயினவற்றுக்கு எல்லாம் நூல் செய்யின், இலக்கணம் எல்லாம் எல்லைப்படாது இகந்தோடும்” (மர-94). இத்தகைய கருத்துகளைக்கூறும் பேராசிரியர், பழைய இலக்கண மரபைப் போற்றிப் பிற்காலத்தில் தோன்றிய இலக்கணக் கொள்கைகளை மறுக்கின்றார். நூலுக்கு உரிய பத்துவகைக் குற்றங்களுள் ஒன்றாக, ‘தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்’ என்பதை மரபியலில் உள்ள சூத்திரம் குறிப்பிடுகின்றது (மர-108). இச் சூத்திர உரையில் பேராசிரியர், “தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்பது, மலைபடு கடாத்தினை ‘ஆனந்தக் குற்றம்’ எனப் பிற்காலத்தான் ஒருவன் ஒரு சூத்திரம் காட்டுதலும் (ஆளவந்த பிள்ளை ஆசிரியர், மலைபடு-145 நச். உரை), பதமுடிப்பு என்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் (நன்னூல்-பதவியல்) போல்வன” என்று கூறுகின்றார். அணிநூலை மறுத்து இவர் கூறும் கருத்துகள் ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றன. “இவ் ஓத்தினில் (உவம இயல்) கூறுகின்ற உவமங்களுள் சிலவற்றையும், சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுள் இயலுள்ளும் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாம் என இக்காலத்து ஆசிரியர் நூல் செய்தாரும் உளர்” என்று கூறி, பின்வரும் காரணங்களைக் காட்டி அணி நூலை மறுக்கின்றார்: 1. அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணி என்று இலக்கணம் கூறப்படா; என்னை? வல்லார் செய்யின் அணியாகியும், அல்லார் செயின் அணியன்றாகியும் வரும், தாம் காட்டிய இலக்கணத்தில் சிதையா வழியும். 2. எல்லாம் தொகுத்து அணி எனக் கூறாது, வேறு சிலவற்றை வரைந்து அணி எனக் கூறுதல் பயமில் கூற்றாம். |