3. வரையறுத்துக் கூறல் அமையாது. 4. அவற்றைப் பொருள்உறுப்பு என்பதுஅல்லது அணி என்பவாயின், சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடையும் முதலாயவற்றையும் வேறுகண்டாற்போல, அவ்வணியும் செய்யுளின் வேறாதல் வேண்டும். 5. செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாம் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாம்.” இக் காரணங்களைக் காட்டி, அணி இலக்கணத்தை மறுக்கின்றார் பேராசிரியர். மேலும் சொல்லணிகளையும் மிறைக் கவிகளையும் பற்றி இவர் கொண்டுள்ள கருத்து, மிகவும் முற்போக்கு வாய்ந்தது. மரபியலில்-(90), மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான என்ற சூத்திரத்தின் உரையின்கீழ், பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்: “நிறைமொழி மாந்தர் மறைமொழி போல்வன சில மிறைக் கவி பாடினார் உளர் என்பதே பற்றி, அல்லாதாரும் அவ்வாறு செய்தல் மரபு அன்று என்றற்கும் இது கூறினான் என்பது; அவை சக்கரம் சுழிகுளம் கோமூத்திரிகை ஏகபாதம் எழுகூற்று இருக்கை மாலை மாற்று என்றாற் போல்வன. இவை மந்திர வகையான் அன்றி, வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு அகன் ஐந்திணைக்கும் மரபு அன்று என்பது கருத்து. அல்லாதார் இவற்றை எல்லார்க்கும் செய்தற்கு உரிய என இழியக் கருதி, அன்ன வகையான் வேறு சில பெய்து கொண்டு அவற்றிற்கும் இலக்கணம் சொல்லுப. அவை இத்துணை என்று வரையறுக்கலாகா; என்னை? ‘ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம்’ என்றாற் போல்வன பலவும் கூட்டிக்கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினும் கடியலாகாமையின். அவற்றிற்கு வரையறை வகையான் இலக்கணம் கூறலாகா என்பது.” இவ்வாறு பழைய இலக்கண மரபே சிறந்தது என்று பல இடங்களில் கூறுகின்றார். புதிய இலக்கண மரபைப் போற்றாத இவர், வழிவழியாக வழங்கி வரும் பழங்கதைகளை மதித்துப் போற்றுகின்றார். தொல்காப்பியர், அகத்தியர் மாணவர் பன்னிருவரில் ஒருவர் என்று இவர் நம்புகின்றார். |