பக்கம் எண் :

223ஆய்வு

     ‘எருமை யன்ன என்னும் புறநானூற்றைப் பாடல் (புறம் 5) நரிவெரூஉத்
தலையார் தம் உடம்பு பெற்று வியந்து பாடியது என்று கூறுகின்றார் (மர-94).

ஆராய்ச்சித் திறன்

    பேராசிரியர் தம் ஆராய்ச்சித் திறன் தோன்ற எழுதி நம்மை வியக்கச்
செய்யும் இடங்கள் சிலவற்றைக் காண்போம்;

     உவம இயலில், வினை பயன் மெய் உரு என்ற நான்கின் அடியாக
உவமைகள் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். (உவம-1)
வடிவமும் நிறமும் பண்பினுள் அடங்கும். அவ்வாறு அவர் கூறாது, வேறு
வேறாகக் கூறியதற்குக் காரணம் கூறுகின்றார் பேராசிரியர்.

     இரவுக் குறிக்கண் கூற்று நிகழ்த்தும் தலைவன் கண்ணால் காணும்
நிறம்பற்றிய உவமை  கூறமுடியாது. கையாலும் மெய்யாலும் தொட்டு அறிந்து
வடிவம் பற்றிய உவமை மட்டுமே
கூற முடியும். பகல்வேளையில் நிகழும்
கூற்றுகளில் நிறம் பற்றிய உவமைகள் இடம் பெறுவது இயல்பே. நுட்பமாக
இதனை உணர்ந்த தொல்காப்பியர், மெய், உரு என்ற இரண்டினையும், பண்பு
என்ற ஒன்றினுள் அடக்கிவிடாமல் வேறுபடுத்திக் கூறினார் என்பது
பேராசிரியர் கருத்தாகும். இக் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது.

     இதனைத் தொடர்ந்து, “இந் நான்கு பகுதியே யன்றி அளவும் சுவையும்
தண்மையும் வெம்மையும் தீமையும் சிறுமையும் பெருமையும் முதலாயின
பற்றியும் உவமப் பகுதி கூறாரோ எனின் அவை எல்லாம் இந் நான்கினுள்
அடங்கும்” என்று எழுதுகின்றார்.

     உவம உருபுகளைப் பற்றி இவர் விரிவாக ஆராய்ந்தள்ளார்.
தொல்காப்பியர் கூறிய முப்பத்தாறு உருபுகளேயன்றி வேறுசில உவம
உருபுகள் வரும் என்று குறிப்பிடுகின்றார். “பிறவும் என்பதனான் எடுத்து
ஓதினவே அன்றி, நேர நோக்க துணைப்ப மலைய ஆர ஆமர அனைய
ஏர ஏர்ப்ப செத்து அற்று கெழுவ என்றல்தொடக்கத்தன பலவும்; ஐந்தாம்
வேற்றுமைப் பொருள் பற்றி வருவனவும்; என என் எச்சங்கள்பற்றி
வருவனவும்; பிறவும் எல்லாம் கொள்க” என்று தம் ஆராய்ச்சித் திறன்
வெளிப்படும் வகையில் கூறுகின்றார். (உவம-11)!

     பல சொற்களின் பொருளை, மிக நுண்மையாக ஆராய்ந்து
விளக்குகின்றார்.