பக்கம் எண் :

225ஆய்வு

தாம் நினைத்தவாறு பாடத்தை மாற்ற முனையாத அக்காலத்தில் -
பேராசிரியர்க்கு இத்தகு சான்றுகள் கிடைத்திருக்க இயலாத அக்காலத்தில்,
‘ஆசிரியனை மறுப்பதா? ஏற்பதா?’ என்ற சிக்கல் வந்து நிற்கிறது. அதனை
விடுவித்துப் பேராசிரியர் எழுதுகின்றார்; ‘நண்டிற்கு மூக்கு உண்டோ எனில்,
அஃது ஆசிரியன் (தொல்காப்பியர்) கூறலால் உண்டு என்பது பெற்றாம்”.
பழமொழி போல் எடுத்துக்கூறக் கூடிய சிறப்புடன் திகழும் இத்தொடர்
பேராசிரியரின் ஆசான் பக்தியைப் புலப்படுத்துகின்றது.

இலக்கியத் திறனாய்வாளர்

    பேராசிரியர் உரைவிளக்கம், சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக்
கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளையும் திறனாய்வு
முறைகளையும் அறிந்து கொள்ள, இவரது உரை பயன்படுகின்றது. கவிதைக்
கலையைப்பற்றி வரன் முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள் தந்து
ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி,
இலக்கியக்கொள்கை, இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத்
தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில்
அவைபற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய
ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு. முற்காலத்துக் கொள்கைகளைப்
பிற்காலத்துக் கொள்கைகளோடு (அணி, யாப்பு பற்றியவை) ஒப்பிட்டு ஒற்றுமை
வேற்றுமை காணுதல், வடமொழி நெறியை நினைவூட்டித் தமிழ் நெறியை
விளக்குதல் போன்ற ஆய்வு நெறிகளை இவரிடம் காணலாம்.

6. தெய்வச்சிலையார்

     தெய்வச்சிலையார் சொல்லதிகாத்திற்கு உரை இயற்றிவர். இளம்பூரணர்,
சேனாவரையர் ஆகியவர்க்குப் பிற்பட்டவர். இவர், தம் உரையில் மற்ற
உரையாசிரியர்களையோ, பிறர் கருத்தையோ குறிப்பிடவில்லை.

     தெய்வச்சிலை என்ற தொடர், பல பொருளையுடையது. சிலை
என்பதற்கு, கல் மலை வில் முதலிய பொருள்கள் உண்டு. போரில் இறந்த
வீரர்களுக்கு நினைவாக நட்ட கல்லை, (நடுகல்லை) கொங்குநாட்டவர்
தெய்வச்சிலை என்பர். பொதியமலை, தெய்வச்சிலை எனப்படும். திருமால்
ஏந்திய வில்லை தெய்வச்சிலை என்பர்.