திருமாலுக்குரிய பல பெயர்களில் ஒன்று தெய்வச் சிலையார் என்பது. பவ்வத் திரைஉலவு புல்லாணி கைதொழுவேன் தெய்வச் சிலையார்க்குஎன் சிந்தைநோய் செப்புமினே (பெரிய திருமொழி-9,4,3) என்று திருமங்கையாழ்வார், திருபுல்லாணியில் வீற்றிருக்கும் திருமாலைக் குறிப்பிடுகின்றார். தெய்வச்சிலையார் என்பது இடைக்காலத்தில் மக்கள் பெயராக வழங்கியது. தேவச்சிலையான் என்றும் கல்வெட்டுகளில் அப்பெயர் வருகின்றது. தெய்வச் சிலையார் விறலி விடுதூது, தெய்வச் சிலைப் பெருமாள் வாகனமாலை, தெய்வச் சிலையான் திருப்புகழ், தெய்வச் சிலையான் வண்ண விருத்தம் ஆகியவை திருமாலைப் பற்றிய நூல்களாகும். வரலாறு உரையாசிரியர் தெய்வச்சிலையார் வரலாற்றை, ஈரோடு புலவர் இராசு, கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு விரிவாக ஆராய்ந்து பல நல்ல செய்திகளை வெளியிட்டுள்ளார் (கொங்கு -1975, ஏப்ரல் மே சூன் இதழ்கள்). அவர் ஆராய்ச்சி முடிவின்படி தெய்வச்சிலையார், முதல் மாறவர்மன் குல சேகர பாண்டியன் (1268-1310) காலத்தில் திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்தவர். இந்தப் பாண்டிய மன்னன் காலத்தில்தான் மார்க்கோபோலே தமிழகத்திற்கு வந்தார். இம் மன்னனுக்குப் பின், தமிழ் மண்ணில் மாலிக்காபூர் படையெடுப்பு நிகழ்ந்தது. தெய்வச்சிலையார் உரையில், பாண்டி நாடு மதுரை பாண்டியர் பற்றிய பல மேற்கோள்கள் வருகின்றன. திருமால் பெயர் தாங்கிய இவரை வைணவர் என்று கருத உரையில் சான்றுகள் உள்ளன: “நிவந்தோங்கு உயர்கொடிச் சேவலாய்-சொல் லுவோர் குறிப்பு மாயவனை நோக்கலில் கருடனாயிற்று; வலம்புரித் தடக்கை மாஅல்; திருமகளோ அல்லள்” போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இருப்பினும் இவர், சைவ சமயத்தைப் போற்றி உரைக்கின்றார். ‘மன்னாப் பொருளும் அன்ன இயற்றே’- என்பதன் உரையில், “வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும் உயிரும், பாசமும் அனாதி, பதியும் பசுவும் பாசமும் |