அனாதி என வரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும், பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க’ என்று சைவசிந்தாந்தக் கருத்தை எழுதுகின்றார். ‘மந்திரப் பொருள்வயின் ஆஅ குநனவும்’ என்பதற்கு உதாரணமாக, ‘நமசிவாய’ என்னும் ஐந்து எழுத்தைக் குறிப்பால் காட்டும் பாடலைக் காட்டுகின்றார். (32). வடமொழி பயின்ற அந்தணர்: இவர் வடமொழி பயின்ற அந்தணராக இருக்கலாம். தலைமை பற்றிய வழக்கிற்குப் ‘பார்ப்பார் வேதம்’ என்று உதாரணம் காட்டுகின்றார். சொல் என்பதற்கு வேதம் என்று பொருள் உரைக்கின்றார் (55). இந்நூல் செய்தான் வைதிக முனிவன் என்கிறார் (55). பாணிணி கொள்கையும் (87, 410), வடமொழி இலக்கணக் கருத்தையும் (2, 66, 68, 81, 292) உரைகளில் குறிக்கின்றார். பஞ்ச திராவிடம், லோபம், பரிணாமம், வாக்கியம், கோமூத்திரம் போன்ற சொற்களை வழங்குகின்றார். எனவே இவரை வடமொழி பயின்ற அந்தணர் என்னலாம். உரையின் சிறப்பயில்புகள் தெய்வச்சிலையார் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் உரையினது அளவை எழுத்துகளால் குறிப்பிடுகின்றார். கிளவியாக்கத்தின் இறுதியில், ‘இவ்வோத்தினுள் சூத்திரமும் உள்பட்ட உரையினது அளவு கிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது’, என்கிறார். இவ்வாறே ஏனைய இயல்களுக்கும் அளவு கூறுகின்றார். “பெண்மை அடுத்த மகன் என் கிளவி”க்கு விளக்கம் எழுதுகையில் “விளையாடு பருவத்துப் பெண் மகளைப் பெண் மகன் என்றல் பண்டையோர் வழக்கு” (159), என்கின்றார். சேனாவரையர் இச் சொல் வழங்குமிடத்தைக் குறிப்பிடுகின்றார். தெய்வச் சிலையார் காலத்தில் அச் சொல்வழக்கு வீழ்ந்ததால் இவ்வாறு கூறுகின்றார். இதனால் சேனாவரையர்க்கும் தெய்வச் சிலையார்க்கும் உள்ள கால இடைவெளி புலப்படும். எச்சப் பெயர் என்பது, பெயரெச்சம் என மொழி மாறி நின்றது என்பது இவர் கருத்தாகும் (201). சாலும் என்ற சொல்லை இவர் போதும் என்ற பொருளில் வழங்குகின்றார். (இச்சொல் தெலுங்கில் அப்பொருளில் வழங்குகின்றது) “யானும் என் எஃகமும் சாறும், நீயும் நின் படைக் |