கலமும் சாறீர், அவனும் அவன் படைக்கலமும் சாலும்” என்று உதாரணங் கூறுகின்றார் (41). புதிய விளக்கம் ‘செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்’ (12) என்ற சூத்திரத்திற்கு இவர் கூறும் விளக்கம் புதியது; மற்ற உரையாசிரியர்கள் கூறாதது. “செப்பு நான்கு வகைப்படும்; துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல் என. துணிந்த கூறல்-தோன்றியது கெடுமோ என்ற வழி, கெடும் என்றல். கூறிட்டு மொழிதல்-செத்தவன் பிறப்பானோ என்ற வழி, பற்றறற் துறந்தானோ பிறனோ என்றல். வினாவி விடுத்தல் - முட்டை மூத்ததோ பனை மூத்ததோ என்ற வழி எம் முட்டைக்கு எப்பனை என்றல். வாய் வாளாமை-ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை.” வேற்றுமை என்பதற்கு இவர் பின்வருமாறு விளக்கம் கூறிப் பொருள் உரைக்கின்றார்: “வேற்றுமை: பொருள்களை வேறுபடுத்தினமையால் பெற்ற பெயர். என்னை வேறுபடுத்தியவாறு எனின், ஒரு பொருளை ஒருகால் வினைமுத லாக்கியும், ஒருகால் செயப்படுபொருள் ஆக்கியும் ஒருகால் கருவியாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும் இவ்வாறு வேறுபடுத்தது என்க” (60). சிறந்த எடுத்துக்காட்டுகள் இவர் பல இனிய எடுத்துக் காட்டுகளை மிகப் பொருத்தமாக அமைத்துள்ளார். முத்தொள்ளாயிரம் வெண்பாக்களைப் போன்ற நயமான பல வெண்பாக்கள் இவர் உரையில் இடம் பெற்றுள்ளன. வேற்றுமை மயங்கியலில் (20), சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகளை மிகச் சுருக்கமாகக் கூறும் வெண்பா ஒன்றைக் காட்டுகின்றார்; காதலியைக் கொண்டு கவுந்தி யொடுகூடி மாதரிக்குக் காட்டி மனையின் அகன்றுபோய்க் கோதில் இறைவனது கூடற்கண் கோவலன்சென்று ஏதம் உறுதல் வினை. |