புதிய உரை திருக்குறளில் சில பாக்களுக்குப் புதிய உரை எழுதுகின்றார். அறனோக்கி (90), வானின்றுலகம் (103), அழுக்காறு ‘உடையார்க்கு (165), அற்றார் அழிபசி (425) ஆகிய குறள்களுக்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். எச்சவியலில், 16ஆம் நூற்பா உரையில், “உலகம் உவப்ப” என்று தொடங்கும் திருமுறுகாற்றுப்படையின் முதல் ஆறு அடிகளுக்குச் சிறந்த நயம் எழுதுகின்றார். சூத்திரங்களை இடம் மாற்றி அமைத்தல் இவர் சொல்லதிகாரத்தில் உள்ள சூத்திர அமைப்புகளை மாற்றியுள்ளார். அவ்வாறு மாற்றியமைக்குத் தக்க காரணமும் கூறுகின்றார். எச்சவியலில் உள்ள மூன்று சூத்திரங்களைக் கொண்டு வந்து, வினையியலின் இறுதியில் வைத்து உரை எழுதுகின்றார். அவற்றை அவ்வாறு அமைக்குமுன், “வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றது என்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்று அன்று” என்று கூறுகின்றார். மேலும், “இவை மூன்று சூத்திரமும் ஈண்டைத் தொடர்புபட்டுக்கிடந்த இதனை, உரை எழுதுவோர், பிரிநிலை வினை என்னும் சூத்திரத்துள் சொல்லப்பட்ட பெயரெச்சம் வினையெச்சம் என்பவற்றை ஈண்டு ஓதப்பட்ட பெயரெச்ச வினையெச்சமாகக் கருதி, ஆண்டுச் சேர வைத்தார் என்பாரும் உளர்” என்று பிறர் கருத்தையும் தருகின்றார். எச்சவியலில், ‘இசைநிறை’ என்னும் 15ஆம் சூத்திரத்தை 29ஆம் சூத்திரமாகவும், வேற்றுமை மயங்கியலில் ‘அது வென்வேற்றுமை’ என்னும் 10-ம் சூத்திரத்தையும் ‘ஆறன் மருங்கின்’ என்னும் 13-ஆம் சூத்திரத்தையும் மாற்றி 15, 16 ஆம் சூத்திரங்களாக வைத்துள்ளார். சூத்திரங்களின் அமைப்பு இவருக்கு முற்பட்ட உரையாசிரியர்கள் கொண்ட சூத்திர அமைப்பையும் இவர் மாற்றுகின்றார். ஒரு சூத்திரத்தை இரண்டாக்குகின்றார். சில சூத்திரங்களை ஒரு சேர எழுதி ஒரே சூத்திரமாக்கியுள்ளார். இத்தகைய மாறுதல்களை உரியியலில் மிகுதியாகக் காணலாம். வேறுபட்ட பாடங்கள் பலவற்றை இவர் மேற்கொண்டுள்ளார். |