பொருள். வினை என்பது ஊழ். பூதம் என்பது நிலம் நீர் தீ வளி ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்த்துவது. அச்சொல்லின் இயன்ற மந்திரம் விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று” (55). மக்கள் வாழ்க்கையும் நாகரிகமும் தெய்வச்சிலையார் காலத்தில் அறச்சாலை இயற்றுதல், குளம்அமைத்தல் போன்ற அறச்செயல்கள் நடைபெற்றன. “யாற்றினது கரைக்கண் நின்ற மரத்தை அறச்சாலை இயற்றுதற்கு ஊரினின்றும்வந்து மழுவினானே வெட்டினான் சாத்தன்” (62), “காவோடு அறக்குளம் தொட்டான்” (71) என்று இவர் உதாரணங்கள் காட்டுகின்றார். “நெல்லாதல், காணமாதல் ஒருவன் கொடுப்பக் கொண்ட வழி ‘இன்றைக்குச் சோறு பெற்றேன்’ என்னும்: அவ்வழிச் சோற்றுக்குக் காரணமாகிய நெல்லும் காணமும் (காசு) சோறு என ஆகு பெயராயின” (110) என்று இவர் கூறுவது, அவர் காலத்தில் கூலியாக நெல்லும் காணமும் தரும் வழக்கம் இருந்ததை உணர்த்துகின்றது. ‘இவ்வூரார் எல்லாம் கல்வியுடையார்’ என்று இவர் உதாரணம் எழுதுகின்றார் (150). கற்றோர் நிரம்பிய ஊர்கள் அக்காலத்தில் பல இருந்ததை இது அறிவிக்கின்றது. இவருடைய உரையில் நெசவுத் தொழிலைப் பற்றிய பல உதாரணங்கள் இடம்பெற்றுள்ளன. அவை கீழே தரப்படுகின்றன: “நெய்தான் என்ற வழி, நெய்யப்பட்ட பொருளும், நெய்வதாகிய தொழிலும் நெய்தற்குக் கருவியும் நெய்தற்குக் காலமும் நெய்தற்கு இடமும் நெய்யும் கருத்தாவும் அதனைக் கொள்வானும் அதனாற் பயனும் உள்ளவழி.” “ஆடையை நெய்தான்; கூடத்துக் கண் நெய்தான். ஆடையை நெய்து முடித்தான் (108). “ஆடையை நெய்தான் தனக்கு”, வேளா காணி* என்பது வேளா காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரான் வழங்குதலின்” (110). இவ்வாறு தெய்வச்சிலையார் நெசவுத் தொழிலைப் பற்றி உதாரணங்கள் காட்டி இருப்பதால் இவர் வாழ்ந்த ஊரில் நெசவு மிகுதியாக இருந்திருக்கும் என்று எண்ண இடமுண்டு. * வேளா காணி - வேளாண் காணி; வேளாங் கண்ணி. |