பக்கம் எண் :

உரையாசிரியர்கள்232

     நான்காம் வேற்றுமை உருபிற்கு, “ஈழத்திற்கு ஏற்றிய பண்டம்” என்ற
உதாரணத்தைக் காட்டுகின்றார். இலங்கையுடன் தமிழகம் கொண்டிருந்த
கடல்வணிக உறவை இது சுட்டுகிறது.

அரிய செய்தி

    இவரது உரையில் அரிய வரலாற்றுச் செய்தி ஒன்று கிடைக்கின்றது.
கல்வெட்டுகள் குறிக்கும் கொல்லம் ஆண்டு பற்றித் தெரிந்து கொள்ள அது
உதவுகின்றது.

     இடைக் காலத்தில், சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பழைய
கொல்லம், கடல்கோளால் அழிந்தது.  பிறகு கடலின் பெயர்ச்சியால் புதிய
நிலப் பகுதி தோன்றியது. புதுநிலப் பகுதிக்கு, மக்கள் கொல்லம் என்றே
பெயரிட்டனர், புதிய கொல்லம் பகுதியில் மக்கள் குடியேறிய காலம் முதல்,
கொல்லம் ஆண்டு கணக்கிடப்பட்டு வருகின்றது.

     இச் செய்தியைத் தெய்வச்சிலையார்,

      கூபகமும் கொல்லமும் கடல்கொள்ளப்
      படுதலின் குமரியாற்றிற்கு வடகரைக்கண்
      அப்பெயரானே கொல்லம் எனக் குடியேற்றினார்

என்று கூறுகின்றார்.

      செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்

என்பதற்கு இவர் தந்துள்ள விளக்கம், இன்றைய மொழியியல் அறிஞர்களைப்
பெரிதும் மகிழ்விக்கின்றது. உரையாசிரியர்களில் சிலர் சோழ நாடே
செந்தமிழ் நிலம் என்பர். வேறு சிலர் பாண்டி நாடே என்பர். ஆனால்
தெய்வச்சிலையார் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும்
நல்லுலகம் முழுவதுமே செந்தமிழ் வழங்கும் நிலம் என்று கூறி
விளக்குகின்றார்.

7. கல்லாடர்

    கல்லாடர் அல்லது கல்லாடனார் என்ற பெயருடன் பண்டைக் காலத்தில்
புலவர் சிலர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் சொல்லதிகாரத்திற்கு
உரைகண்ட கல்லாடர். கல்லாடம் என்பது ஊரின் பெயர். அவ்வூரில்
சிவபெருமான் கல்லாடர் எனப்படுகின்றார். அப் பெயரை மக்களுக்கு இட்டு
வழங்கினர்.*


* கல் ஆல மரத்தின்கீழ் இருந்த தட்சிணாமூர்த்தி, கல்லாலன்; அப்பெயரே,
  ‘கல்லாடன்’ ஆயிற்று.