சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியவர் அனைவர்க்கும் பிற்பட்டவர் கல்லாடர். இவர் உரை, முன்னோர் உரைகளிலிருந்து தமக்குப் பிடித்தவற்றை எல்லாம் ஒருங்கு சேர்த்து எழுதப்பட்ட உரையாக உள்ளது. இளம்பூரணர், சேனாவரையர் ஆகிய இருவரும் காட்டிய உதாரணங்களைக் கல்லாடர் அப்படியே மேற்கொள்கின்றார். “பெயர் நிலைக் கிளவி” என்னும் சூத்திர உரை நச்சினார்க்கினியர் உரையின் எதிரொலியாகவே உள்ளது. பரிமேலழகர் “ஒன்றாக நல்லது” (323) என்னும் குறள் உரையில் கூறிய “முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்து ஆகலின்” என்னும் தொடரைக் கல்லாடர் 159 நூற்பாவுரையில் மேற்கொள்ளுகின்றார். கல்லாடர் உரையைப் பிரயோக விவேக நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்: “சோற்றையட்டான் என, செய்வான் கருத்துள் வழிச் செயப்படுபொருள் ஆதலும், குழந்தை சோற்றைக் குழைத்தான் எனக் கருத்தில் வழியாதலும் என இரு வகைய” என்ற கல்லாடரின் விளக்கம் பிரயோக விவேகத்தில் (பிரயோக - 12 உரை) உள்ளது. “மக்கள் சுட்டு என்பதனைக் கல்லாடனாரும் பின்மொழியாகு பெயராய் நின்ற இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்” என்று பிரயோக விவேக நூலார் குறிப்பிடுகின்றார் (பிரயோக-11 உரை). எனவே, கல்லாடர் நச்சினார்க்கினியர்க்குப் பின்னும் பிரயோக விவேக நூலார்க்கு முன்னும் வாழ்ந்தவர் என்னலாம். இவரது காலம் 15, 16-ஆம் நூற்றாண்டாகலாம். கல்லாடர் உரை, இடையியல் (13 சூத்திரங்கள்) வரை உள்ளது. இயல்களின் முறைவைப்பை விரிவாக இவர் ஆராய்ந்து கூறுகின்றார். வேற்றுமை என்பதை, இலக்கண ஆராய்ச்சியுடன் தெளிவாக விளக்குகின்றார். கல்லாடனார் தயக்கத்தோடும் ஐயத்தோடும் பல இடங்களில் உரைகண்டுள்ளார். 210ஆம் சூத்திரத்திற்கு உரைகூறி, ‘இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க’ என்று மொழிகின்றார். சில சூத்திரங்களின் பொருளை எழுதி ‘என்பது போலும்’ என்று கூறி முடிக்கின்றார். 222 ஆம் சூத்திரவுரையில், ‘பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம்” என்று எழுகின்றார். கல்லாடர் உரைக்கென்று சில தனிச் சிறப்பியல்புகள் இருப்பினும், செல்வாக்குடன் புலமை உலகில் இது பரவவில்லை. |