பக்கம் எண் :

உரையாசிரியர்கள்234

8. பழைய வுரை 

     தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குப் பழையவுரை ஒன்று உள்ளது.
இதனை இயற்றியவர்  ஊர் பேர் எதுவும் தெரியவில்லை.

     இவ்வுரை கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல்
ஆகிய மூன்றிற்கு மட்டுமே உள்ளது.

     இவ்வுரை, முன்னைய உரைகளைத் தழுவியே செல்கின்றது. எல்லா
உரைகளிலிருந்தும் நல்லன எடுத்து அமைத்துக் கொண்டுள்ளது.

    இவ்வுரையாசிரியர் நறு நாற்றத்திற்குப் பூதி (விபூதி) நாற்றத்தையும்,
‘நும்நாடு யாது?’ என்ற வினாவுக்கு விடையாகப் பாண்டிய நாட்டையும்
கூறியிருப்பதால் இவரைப் பாண்டிய நாட்டுச் சைவர் என்னலாம்.

     மற்ற உரையாசிரியர்கள் ஓம்படைக் கிளவிக்குப் ‘புலி போற்றிவா’
என்ற தொடரை மட்டுமே காட்டுகின்றனர். இவர்,

     புலிபோற்றி வாவாழி ஐய ஒலிகூந்தல்
     நின்னல தியாரும் இலள்

என்ற ஒரு குறள்வெண்பாவைக் காட்டுகின்றார்.

     வெண்களமர்,  கருங்களமர் ஆகிய சொற்றொடர்களைச் சேனாவரையர்
முதலிய உரையாசிரியர்கள் உதாரணங் காட்டியிருப்பினும் அவற்றின்
பொருளை விளக்கவில்லை. இவர் கிளவியாக்கத்தினுள் (17) ‘வெள்ளாளரை
வெண்களமர் என்றும், புலையரைக் கருங்களமர் என்றும், சாதி பற்றி
வெள்ளாடு என்றும் சொல்லுதல் வழுவன்று’ என்று பொருள் விளங்குமாறு
கூறுகின்றார்.