பக்கம் எண் :

235ஆய்வு

2 

நச்சினார்க்கினியர்


1. வரலாறும் சிறப்பியல்புகளும்

     நச்சினார்க்கினியர், இலக்கணம், இலக்கியம் ஆகிய இருவகை
நூல்களுக்கும் உரை எழுதிய சான்றோர். தலைசிறந்த தமிழ் நூல்கள்
பலவற்றிற்கு உரை கண்டு, உரையாசிரியர்களுள் மிகச் சிறந்தவர் என்ற
பெருமையுடன் மேலோங்கி நிற்பவர். பல நூறு ஆயிரம் பாடல்களை
மனப்பாடமாகக் கொண்ட திறனும், பிறழாத நினைவாற்றலும், கலைச்
சுவையுடன் அழகிய உரைநடை எழுதும் வன்மையும் கொண்டவர்.
உழைப்பின் திருவுருவாய்-நுண் அறிவின் இருப்பிடமாய்-இலக்கிய
ஆராய்ச்சியின் பிறப்பிடமாய் விளங்குபவர். இவரது அருமை பெருமைகளை
ஆராய ஆராய்ச்சியாளர் ஈடுபட்டால். பெரு நூல் ஒன்று எழுத இடமுண்டு.

     பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், சங்க இலக்கியத்துள்
பத்துப்பாட்டு, கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை, குறுந்தொகையில் இருபது
பாடல்கள், ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணி ஆகிய
சிறந்த நூல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை கண்டுள்ளார்

         பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
         ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும்-சாரத்
         திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
         விருத்திநச்சி னார்க்கினிய மே

என்ற வெண்பா, இவர் உரை கண்ட நூல்களைக் குறிப்பிடுகின்றது. இவற்றுள்
குறுந்தொகை உரை கிடைக்கவில்லை.

     இவர் நீண்ட நாள் வாழ்வாங்கு வாழ்ந்து, தம் வாழ் நாளின்
பெரும்பகுதியைச் சிறந்த நூல்களைக் கற்பதிலும் உரை எழுதுவதிலும்
கழித்திருக்கவேண்டும். தாம் உரை எழுத எடுத்துக் கொண்ட நூல்களையும்
அவற்றிற்குரிய உரைகளையும் பலமுறை பயின்று பயின்று தெளிவு
பெற்றிருக்க வேண்டும். நூல்களுக்கு உரை இயற்றத் தொடங்குமுன் இவர்,
தமிழ் மொழியிலுள்ள பல