பக்கம் எண் :

உரையாசிரியர்கள்236

நூல்களை ஆழ்ந்து பயின்று புலமை பெற்றுள்ளார். இலக்கண
இலக்கியங்களையே அல்லாமல் ஏனைய கலைகளிலும் நிரம்பிய அறிவு
பெற்றுள்ளார். மக்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து உலகஅறிவு
பெற்றுள்ளார். வடமொழியிலுள்ள சிறந்த நூல்களில் தோய்ந்து
மகி்ழ்ந்துள்ளார். இவர், நூல் எதுவும் இயற்றவில்லை. ஆதலின் இவர்
வாழ்நாள் முழுமையும் பண்டைத் தமிழ் நூல்களுக்கு நல்லுரை
காண்பதிலேயே கழிந்தது என்னலாம்.

     நச்சினார்க்கினியர் வரலாற்றினை அறிய உரைச் சிறப்புப் பாயிரம்
துணைபுரிகின்றது.

          வண்டிமிர் சோலை மதுரா புரிதனில்
         எண்டிசை விளங்க வந்த ஆசான்
         பயின்ற கேள்வி பாரத் துவாசன்
         நன்மறை துணிந்த நற்பொருள் ஆகிய
         தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர்
         தானே யாகிய தன்மை யாளன்
         நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்

என்ற பாயிரப்பகுதி இவர் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக
உணர்த்துகின்றது. பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையில் இவர்
வாழ்ந்துவந்தவர்; ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்தவர்; பாரத்துவாச
கோத்திரத்தவர்; பார்ப்பன மரபினர்; சிவஞானச் செல்வர் என்ற
குறிப்புகளைப் பாயிரம் நமக்கு உதவுகின்றது. மேலும் இவரது கல்வி
மாண்பினை,

          பாற்கடல் போலப் பரந்த நன்னெறி
         நூற்படு வான்பொருள் நுண்ணிதின் உணர்ந்த
         போக்கறு கேள்விப் புலவோர் புலத்தின்
         நாற்பொருள் பொதிந்த தாக்கமை யாப்பினைத்
         தேக்கிய சிந்தையன்

என்று பாயிரம் பாராட்டுகின்றது.

     இவரது உரைகளைத் திளைத்த இலக்கிய அன்பர் ஒருவர், இவரைப்
பற்றிய சிறப்புப்பாயிரச் செய்யுளை இயற்றியுள்ளார். அதில் அவர், இவரது
உரைத்திறன்களை எல்லாம் ஆராய்ந்து மதிப்பிடுகின்றார்; கற்ற நெஞ்சத்தில்
மண்டிக் கிடக்கும் இலக்கியச் சுவையை உணர்ச்சி பொங்கத்
தெள்ளத்தெளிவாய் வெளிப்படுத்துகிறார்.

     நச்சினார்க்கினியர் என்ற இனிய பெயர், சிவபெருமானுக்கு உரியது.