பக்கம் எண் :

237ஆய்வு

          இச்சையால் மலர்கள் தூவி
             இரவொடு பகலும் தம்மை
         நச்சுவார்க் கினியர் போலும்
             நாகவீச் சரவ னாரே
                           (திருநா. திருநாகேச்சுரம், தே.)

என்று அப்பரும்,

          நச்சினார்க் கினியாய் போற்றி
             எனத்துதி நவிலும் காலை
                          (காஞ்சிப்புராணம் - சந்ததான - 11)

என்று சிவஞான முனிவரும் சிவபெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர்.
இப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் சைவர் என்பதில் ஐயமில்லை.

     இவரது உரையில், இவரைச் சைவ அன்பர் என்று அறிந்து
கொள்ளத்தக்க சான்றுகள் உண்டு. தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் (25)
கண்டன், கந்தன், கம்பன், மன்றன் என்ற பெயர்களை வரிசையாக
எடுத்துக்காட்டுகின்றார். மொழி மரபில் (12) “திருச்சிற்றம்பலம்-ஆறு எழுத்து
ஒரு மொழி; பெரும்பற்றப் புலியூர்-ஏழ் எழுத்து ஒரு மொழி” என்று
குறிப்பிடுகின்றார்.

     இவர், சைவ சமயக் கருத்துக்களை நன்கு உணர்ந்துள்ளார்; சைவ
சமய நூல்களை நன்கு பயின்றுள்ளார். தம் உரைகளில் பலவிடங்களில்
இலக்கண இலக்கியப் பொருள்களையும் தத்துவப் பொருள்களையும் விளக்க,
சைவ சமய நூல்களாகிய திருவாசகம், திருக்கோவையார், திருவுலாப் புறம்
முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். சீவகசிந்தாமணி உரையில்
சில பாடல்களுக்கு (362, 1141) விளக்கவுரை எழுதும்போதும்,
திருமுருகாற்றுப்படை உரையில் சில நயங்கள் எழுதும்போதும் இவரது
சைவநூற்புலமை வெளிப்படுகின்றது.

    இவர் பாரத்துவாச கோத்திரத்தார். தொல்காப்பியத்தின் ஒவ்வோர் இயல்
முடிவிலும் பத்துப்பாட்டின் முடிவிலும் ‘மதுரை ஆசிரியர் பாரத்துவாசி
நச்சினார்க்கினியர்’ என்று இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பாரத்துவாச
கோத்திரத்தினர் வைணவர், ஸ்மார்த்தர், மாத்துவர் என மூன்று பிரிவினராய்
உள்ளனர். அப்பிரிவினருள் நச்சனிார்க்கினியர் ஸ்மார்த்த பிராமணர் ஆவர்.
ஸ்மாத்தர் ஸ்மிருதியில் கண்ட நெறியை மேற்கொண்ட அத்வைதக்
கொள்கையினர். நச்சினாக்கினியர் ஸ்மார்த்தர் என்பதற்கும் அத்வைதக்
கொள்கையினர் என்பதற்கும் இவரது உரையில் சான்று உண்டு.